×
 

அனலைக் கிளப்பும் அண்ணா பல்கலை மாணவி விவகாரம்... சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம்....

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்..

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பி வருவது அனைவரும் அறிந்ததே.. அது தமிழக சட்டப்பேரவையையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக அதுபற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தநிலையில், இன்று சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. 

அந்த தீர்மானத்தின் மீது பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொங்கு ஈஸ்வரன், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததே மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு காரணம் என குற்றஞ்சாட்டினார். அண்ணா பல்கலையின் வேந்தர் என்ற முறையில் நடந்த இச்சம்பவத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டார். துணைவேந்தர் இல்லாததால் அதிகாரிகள் தான் முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதனாலேயே பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழக் காரணமாக அமைந்து விட்டதாகவும் பேசினார். எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் யார் அந்த சார் என்பது ஆளுநராகவே இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்கு ஈஸ்வரன் பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கருப்புச்சட்டையில் சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்...

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி, மாரிமுத்து, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் இதே கருத்தையே வழிமொழிந்து பேசினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் பேசும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழக கல்வி கட்டமைப்பின் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் செல்வபெருந்தகை பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை நினைவுகூர்ந்தார். அதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அவையில் சிறிதுநேரம் அமளி நிலவியது. 

தொடர்ந்து பேசிய அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் மர்மர் நிறைந்ததாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டினார். யார் அந்த சார் என கேள்வி எழுப்பவும், போராட்டம் நடத்தவும் ஜனநாயக நாட்டில் அனுமதி மறுக்கப்படுவதாக பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அரசு அவ்வாறு மறைக்க வேண்டும் என நினைத்திருந்தால் கவன ஈர்ப்பு தீர்மானமே இன்றைய தினம் எடுத்துக் கொண்டிருக்கப்பட மாட்டாது என தெரிவித்தார். தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கருத்துகளை கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எடுத்து வைத்தன.

இதையும் படிங்க: அந்த சார் யாருனு தெரிந்தால் ஆட்சி ஆட்டம் காணும் ..பயத்தில் திமுக ..போட்டு தாக்கும் அதிமுக கடம்பூர் செ.ராஜூ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share