சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி போராட்டம்... பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு...
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர தேவைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை தியாகராய நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அன்புமணி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றார். அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து எந்த இடம், எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது வடிகட்டிய பொய் என்று அன்புமணி ஆவேசத்துடன் பேசினார். சமூகநீதி என்றால் என்ன? பின்தங்கிய சமுதாயத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பது தானே சமூகநீதி.. அப்படியென்றால் பின்தங்கிய சமுதாயத்தினர் என்றால் யார் என கண்டறிந்தால் தானே அவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தரமுடியும் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.
இந்தியாவிலேயே 69 சதவித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் தான் நடைமுறையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதாவால் தான் இந்த 69 சதவித இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டதாக அன்புமணி தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு பீகாரில் நடத்த முடிகிறது, தெலங்கானாவில் நடத்த முடிகிறது.. தமிழ்நாட்டில் ஏன் நடத்த முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். சாதிவாரி கணக்கெடுப்பை பாட்னா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான செய்தியை பதிவு செய்வதாக அன்புமணி ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வடலூர் சத்தியஞான சபையில் மரங்கள் வெட்டப்படுவதை உடனே நிறுத்துக.. அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்..
ஒருவேளை நாளை 69 சதவித இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாகும் என்று அன்புமணி எச்சரிக்கை விடுத்தார். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முதலமைச்சர்களை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சந்தித்தபோது, தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அவர்கள் கூறவில்லை என்றும், மு.க.ஸ்டாலின் மட்டும் தான் அதிகாரம் இல்லை என்று பொய் கூறுவதாக அன்புமணி சுட்டிக்காட்டினார்.
வலசை பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த முடிகிறது, முட்டையிட வரும் ஆமைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த முடிகிறது... சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் நடத்த முடியாதா என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் மீது சந்தேகம்..! ஆதவ் அர்ஜூனாவை வைத்து கண்காணிக்க உத்தரவு… விஜய் அதிரடி..!