கூப்பிட்டா நாங்களும் வந்துருப்போம்... டிவிஸ்ட் அடித்த அண்ணாமலை!!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கான அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, தமாகா, நாதக, புதிய தமிழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் பங்கேற்கவில்லை. இதை தொடர்ந்து சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பாக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு அறிவுரை கூற வேண்டும். அதில் எந்த தவறும் இல்லை. ஆளுங்கட்சியாக உள்ள பாஜக எதிர்க்கட்சியினர் அறிவுரைகளை கேட்டு வருகிறோம். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வைக்கக் கூடிய குற்றச்சாட்டு என்னவென்றால், நீங்கள் அனைத்து கட்சிக் கூட்டம் என்று அழைக்கும் போது அறிவுரை சொல்லலாம் என்று அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: வெட்கமில்லையா..? காவிரி, முல்லைப்பிரச்னையை தீர்க்க ஏதாவது கூட்டம் போட்டீர்களா.? அண்ணாமலை ஆவேசம்
அறிவுரை என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அப்போது மாநில உரிமை பறிபோகிறது, மத்திய அரசு நசுக்குகிறது, தமிழ்நாட்டின் குரல்வலையை மிதிக்கிறார்கள் என்றுதான் கடிதம் எழுதினார்கள். அனைத்து கட்சிக் கூட்டத்தில் கருத்துகளை கூறுங்கள், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று சொல்லி இருந்தால் பாஜகவும் வந்திருக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டின் உரிமை எங்கேயும் பறிபோய்விடக் கூடாது. நாங்கள் இருப்பதே தமிழக உரிமையை காப்பதற்குதான். ஆனால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கும் போது, அவர்களின் அழைப்பு அப்படி சொல்லவில்லை.
ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் இதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று பேசியுள்ளார்கள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். விகிசிதாச்சார அடிப்படையில் எப்படி தொகுதி மறுசீரமைப்பு நடக்குமோ அப்படிதான் அடுத்த முறையும் நடக்கும். 543 லோக் சபா தொகுதிகளில் தமிழ்நாட்டிற்கு 39 உள்ளது. அதன் விகிதாச்சாரம் 7.17 சதவிகிதம். அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளது.
அவர்களுக்கு 14.7 சதவிகிதம் இருக்கிறார்கள். நாளை புதிதாக எத்தனை எம்பி-க்கள் வந்தாலும், இதே சதவிகிதம் தான் தொடரும். இன்றைய நிலையே தொடரும். அதனால் கூட்டத்தை போட்டு மத்திய அரசை திட்டுவது தவறு. ஆனால் அதேபோன்று கூட்டத்தை கூட்டி மத்திய அரசிடம் எடுத்து செல்வோம். நமது கருத்தை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்பதில் தவறில்லை. பாஜகவை பொறுத்தவரை அனைவரிடமும் கருத்துகளை கேட்டிருக்கிறோம். ஜனநாயகத்தில் ஒரு கட்சி தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றால் அழிந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என் போன்ல அண்ணாமலையோட வீடியோ இருக்கு... சிங்கிள் வார்த்தையில் பாஜகவை சிதறவிட்ட செந்தில் பாலாஜி...!