ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி நடைபயணம்.. அனுமதி கோரிய மனு மீது பதிலளிக்க ஆவடி கமிஷனருக்கு உத்தரவு..!
ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் வரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனு மீது பதிலளிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் வரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனு மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமுக ஏற்றதாழ்வை களைவதற்காகவும், சமுகத்தில் பின் தங்கிய பிரிவினரின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் கல்விக்காக சேவையாற்றிய மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'அந்த என்கவுண்டர்... ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு..?' - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
அதில் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து தொடங்கி அவரது நினைவிடம் அமைந்துள்ள பொத்தூர் வரை வழக்கறிஞர்கள் நடைப்பயணம் மேற்கொள்ள வரும் மார்ச் 30 ம் தேதி அல்லது ஏப்ரல் 6 ம் தேதி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர் தரப்பில், ஆம்ஸ்ட்ராங் அவர்களால் பயனடைந்த வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஆம்ஸ்ட்ராங் உருவப்படம் மற்றும் பேனாவை ஏந்தி சென்னை கீழ்ப்பாக்கம் இருந்து பொத்தூர் வரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி காவல்துறைக்கு அளித்த மனு மீது எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது
காவல்துறை தரப்பில் கோபிநாத் ஆஜராகி, ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்தநாள், மறைந்த நாள் என எந்த நிகழ்வுகளும் இல்லாத நிலையில் இந்த நடைப்பயணத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நடைப்பயணம் 4 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி 4 வாரங்களில் மனுதாரர் அளித்த மீது பரிசீலித்து முடிவெடுக்க ஆவடி நகர காவல் ஆணைருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன்... தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு..!