ஆட்டோ மீது சரிந்து விழுந்த உதயநிதி கட்டவுட்.. இணையத்தில் பரவும் வீடியோ!
திருவள்ளூர் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி படத்துடன் வைக்கப்பட்டிருந்த கட்டவுட் ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்தனர். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களை வரவேற்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட எல்லையான அரண்வாயல் முதல் கூட்டம் நடைபெறும் இடம் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருப்பாச்சூர் அதாவது கூட்டம் நடைபெறும் இடம் வரையிலும் சுமார் 25 அடி உயரத்தில் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக பொது இடங்களில் கட்டவுட் வைக்க கூடாது என அரசு ஆணை வெளியீட்டும், உரிய அனுமதி இன்றி ஆபத்தான முறையில் திமுக நிர்வாகிகள் அவர்களது கட்சித் தலைவர்கள் படத்துடன் கட்டவுட் வைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மகன் திருமணத்தை வைத்து எஸ்.பி.வேலுமணிக்கு நெட்டு கட்டிய திமுக... பாய்ந்தது அதிரடி வழக்கு...!
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பிரதான சாலையில்ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருக்கும் கட்டவுட்டுகளை அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக விரைந்த அகற்றுமாறு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று பலத்த காற்று மற்றும் மழை பெய்தது. அப்போது வழியாக சென்ற ஆட்டோ மீது துணை முதலமைச்சர் உதயநிதி படத்துடன் வைக்கப்பட்டிருந்த 25 அடி உயரம் கொண்ட கட்டவுட் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இதில் ஆட்டோ ஓட்டுநர் நிலை தடுமாறி சாலை தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், அனுமதியின்றி கட்டவுட் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்.. பயணிகள் 2 பேர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!