×
 

திமுக வாக்குகள் பிரிப்பு.. பாஜக கூட்டணிக்கு நல்லது செய்யும் விஜய்.. பாஜக நிர்வாகி தாறுமாறு!!

திமுக கூட்டணியில் விரைவில் விரிசல் வரும். அப்போது திமுகவின் பயம் இன்னும் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் கூறினார்.

தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் விசாரித்துள்ளனர். இந்த வழக்கிற்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை.பாஜக ஆட்சிக்கு முன்பே சுப்பிரமணியசுவாமியால் தொடரப்பட்ட வழக்கு இது.

எனவே,  அமலாக்கத் துறை விசாரணையைத் தடுக்க முடியாது. முறைகேடான பணப்பரிவர்த்தனை நடைபெற்றால் அமலாக்கத் துறை விசாரணை நடத்ததான் செய்யும். செந்தில் பாலாஜி வழக்கில் மாநிலக் காவல் துறைதான் வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். அமைச்சராக இருந்துள்ளார். அவர் தலைவரானதை நாங்கள்  ஏற்றுக் கொண்டுள்ளோம். திமுகவையும், திமுக ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவினரின் ஒரே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘யாருக்கும் கொள்ளையடிக்க லைசன்ஸ் இல்லை’.. காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்..!

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. அதிமுக எப்போதும் பாஜகவினுடைய நட்பு கட்சிதான். பாஜகவின் கொள்கைக்கு பலமுறை அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரு கட்சிகளும் பலமுறை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. இப்போது மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம். இந்தக் கூட்டணியை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.



காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கிய கட்சிதான் திமுக. மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்தில் திமுக ஆட்சியை இரண்டு முறை டிஸ்மிஸ் செய்தது. இப்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. திமுக கூட்டணியில் விரைவிலேயே விரிசல் வரும். அப்போது திமுகவுக்கு இன்னும் பயம் அதிகரிக்கும்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆர், என்டிஆர் தவிர வேறு யாராலும் வெற்றிபெற முடியவில்லை. விஜய்காந்த் வந்தார், அவரால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. கமலால் வெற்றிபெற முடியாது. அந்த வகையில் நடிகர் விஜயாலும் வெற்றி பெற முடியாது. இந்த யாதார்த்தம் விஜய்க்கு புரிவதற்கு இன்னும் கொஞ்ச நாளாகும். விஜய் அரசியலில் இருப்பது பாஜகவுக்கு நல்லதுதான். திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகளைதான் விஜய் பிரிப்பார். இது பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று ராம. சீனிவாசன் கூறினார்.

இதையும் படிங்க: திருமணக் குதிரை நடனமாடும் போது பந்தயக் குதிரை ஓடும்… பாஜகவை பல்ஸ் பார்க்கும் ராகுல் காந்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share