டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைத்து டங்ஸ்டன் எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரியவகை உலோகமான டங்ஸ்டன் தனிமம், தொழில்நுட்பத்துறைக்கு தேவையான மிக முக்கிய மூலப்பொருள் ஆகும். தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் டங்ஸ்டன் அதிக அளவில் இருப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சுரங்கம் அமைத்து டங்ஸ்டனை வெட்டி எடுப்பது என மத்திய அரசு முடிவு எடுத்தது.
இதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுரங்கத்திற்கான ஏலம் விடும் பணிகளை மத்திய அரசு தொடங்கி நவம்பர் மாதம் நிறைவு செய்தது. தொல்லியல் தொன்மை மிக்க பகுதி என்பதாலும் ஏராளமான மரபுச் சின்னங்கள் இருப்பதாலும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் 9-ந் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.
இதையும் படிங்க: எல்லை மீறி பேசுறீங்க சீமான்..அரசியலுக்கு நல்லது இல்ல..திருமா வார்னிங் !
அரிட்டாபட்டி மக்கள், டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் மதுரை நாயக்கர்பட்டியைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும்படி கோரிக்கை விடுத்தனர். பல்லுயிர் மரபுச் சின்னம் மற்றும் ஏராளமான கலாச்சார பாரம்பரிய இடங்கள் அடங்கியுள்ளதாக மத்திய அமைச்சரிடம் அம்பலகாரர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று மரபுச்சின்னங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் அரிட்டாபட்டியில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களிடம் உறுதி அளித்தார். மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து அரிட்டாபட்டி கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
முன்னதாக டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழக மக்களுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாக நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அவர் கூறியபடியே இன்று திட்டம் ரத்து என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: “காத்திருந்து...காத்திருந்து...” அண்ணாமலை சொன்னதை நம்பி பட்டாசு, ஸ்வீட் உடன் காத்திருந்து ஏமாந்த விவசாயிகள்!