சூடுபிடிக்கும் வேங்கைவயல் விவகாரம் ... வீடு தேடி சென்ற சிபிசிஐடி!!
வேங்கை வயல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து பரபரப்பாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடியின் தனிப்படையினர் வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே, வேங்கை வயல் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறி அதே கிராமத்தை சேர்ந்த காவலர் முரளி ராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மீது குற்றம்சாட்டிய சிபிசிஐடி போலீசார் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு விசாரணை - 3 போலீசார் நாளை ஆஜராக சிபிசிஐடி சம்மன்
இந்த மூன்று பேரும் குற்றவாளிகள் இல்லை என கருத்துகள் எழுந்த நிலையில் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் வன்கொடுமை சட்டபிரிவு இல்லாததால் வழக்கு நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஏற்று கொள்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதன் காரணமாக மார்ச் 11ம் தேதி வழக்கில் தொடர்புடைய 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி முரளி ராஜ், முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோருக்கு சிபிசிஐடி தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள்... பூமி பூஜையுடன் தொடங்கிய இஸ்ரோ..!