சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு.. ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் முக்கிய ஆலோசனை..!
இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.
கூட்டணி, பாஜக மாநில தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் என்ற சூடுபிடிக்கும் அரசியல் சூழலில் 2 நாள் பயணமாக பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவரது வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
வானதி ஸ்ரீநிவாசன், முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமித்ஷாவை வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அமித்ஷா தங்குவதற்காக புறப்பட்டார்.
இதையும் படிங்க: பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு.. அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்..!
இந்த நிலையில், இன்று காலை முதல் மாலை வரை, தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன், அமித்ஷா ஆலோசனை ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில், அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், பாஜக மாநிலத் தலைவர் நியமனத்திற்கும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகைக்கும் சம்பந்தமில்லை என அண்ணாமலை கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவும், அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு அமித்ஷா செல்ல உள்ளார். அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் வர உள்ளதாகவும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைகளை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர்..! அடிச்சு சொல்லும் ஆர்.பி.உதயகுமார்..!