தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்.. உயிர் தப்பிய பயணிகள்.. சென்னையில் பரபரப்பு..!
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் மக்கள் தினசரி வேலைக்கு செல்வதற்காகவும், மற்ற இடங்களுக்கு செல்வதற்காகவும் மின்சார ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் ஒன்று ராயபுரம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ரயிலின் 4வது பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனை கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தியதால், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பயணிகளும் உடனே சுதாரித்துக்கொண்டு ரயிலிலிருந்து வெளியேறினர். இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: கடலூரில் பயங்கரம்; பைக்கில் சென்றவருக்கு இப்படியொரு நிலையா? அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்...!
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அந்த வழித் தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது, அதிக அளவிலான வெப்பம் நிலவி வருவதால் அழுத்தம் ஏற்பட்டு தண்டவாளம் விரிவடைந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும், ரயிலின் சக்கரங்கள், தண்டவாளங்களில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: 150 அடி தேர் சாய்ந்து விபத்து! பரிதாபமாக பறிப்போன உயிர்கள்...