இரும்பிலே இருதயம் முளைக்குதோ..! ரோபோவுடன் டேட்டிங் போகும் இளைஞர்.. சீனாவில் வினோதம்..
சீனாவில் கிட்டத்தட்ட மனித உருவிலான ரோபோவை வாடகைக்கு எடுத்து டேட்டிங் செல்லும் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலுக்கு கண் இல்லை. ஏன் ஜாதி, மதம் கூட இல்லை என்று கேள்வி பட்டிருக்கிறோம். தற்போது காதலிக்க பெண்ணும் தேவையில்லை என்றாகிவிட்டது. ஹியூமனாய்டு ரோபோக்கள் என அழைக்கப்படும் மனித வடிவிலான ரோபோக்கள் இப்போது காதலுக்கு புது வடிவங்கள் கொடுக்க துவங்கி விட்டன. எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ போல, காதலர்களின் எதிர்பார்ப்புகளை தீர்த்துவைக்கும் ஒரு காதலி ரோபோவை வாடகைக்கு எடுத்து டேட்டிங் சென்று வந்திருக்கிறார் சீன வாலிபர் ஒருவர். அந்த ரோபோவுடன் அவர் செலவிட்ட ஒவ்வொரு தருணங்களையும் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி டிரண்டிங் செய்திருக்கிறார்.
சீனாவை சேர்ந்த 25 வயதான ஜாங் ஜென்யுவான் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மெயின்லேண்ட் டேட்டிங் ரியாலிட்டி ஷோ நடந்தது. அதில் கலந்துகொண்ட ஜாங் ஜென்யுவான், மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்தார். அதன்பின் அவரது சமூக வலைதள கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.
தற்போது அவரை சமூகவலைதள கணக்குகளில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இத்தனை பேர் தன்னை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்தாலும், ஜாங் ஜென்யுவான் தான் தனிமையில் இருப்பதாகவே உணர்ந்துள்ளார். தனக்கு ஒரு காதலி வேண்டும். அவள் அன்பில் திளைத்திட வேண்டும் என ஏங்கி உள்ளார்.
இதையும் படிங்க: வஞ்சகத்தால் அடி வாங்கிய பாகிஸ்தானில் சீனா இறக்கும் ஆயுதங்கள்: இந்தியாவுக்கு அதிர்ச்சி ..!
அதற்கு அவர் தேர்ந்தேடுத்தவள் தான் Unitree G1. பெயர் மட்டுமல்ல.. ஆளே வித்தியாசம் தான்.. ஆமாம் G1 என்பது ஹியூமனாய்டு ரோபோ. பார்பதற்கு கிட்டத்தட்ட மனித உருவில் இருக்கும் இந்த ரோபோ, மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய புரோகிராம் செய்ய பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தால் கடந்த ஆண்டு மே 13 அன்று வெளியிடப்பட்டது. 127 செ.மீ உயரமும் 35 கிலோ எடையும் கொண்டது. தான் டேட்டிங் அழைத்து செல்ல ஹியூமனாய்டு ரோபோ G1-ஐ தேர்ந்தெடுத்த ஜாங் ஜென்யுவான், அதற்கு ஒருநாள் வாடகையாக மட்டும் 99,000 யுவான் (US$14,000) அதாவது நமது இந்திய ரூபாய் மதிப்பில் 1,20,000 ரூபாய்க்கும் அதிகமாக செலவழித்துள்ளார்.
அறிவியல் புனைகதை (சயின்ஸ் பிக்ஷன்) படங்களால் ஈர்க்கப்பட்ட ஜாங் ஜென்யுவான், தனது கனவை இதன் மூலம் நிறைவேற்றி உள்ளார். இந்த G1,ஜாங் ஜென்யுவானுக்காக முட்டைகளை சமைக்கத் தொடங்கியது. பால் ஊற்றி கொடுத்தது. அப்போது பால் சிந்தியதும், தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்தது. தனது தவறை சரிசெய்தது.
மேலும் காலை உணவுக்குப் பிறகு அவரது குடியிருப்பை துடைத்து சுத்தம் செய்தது. ஜாங்கும் ரோபோவும் இறுதியில் அபார்ட்மெண்டிலிருந்து வெளியே நீண்ட நடைப்பயணத்திற்குச் சென்றனர். அப்போது ஜாங், அந்த ரோபோவை நடனமாட சொன்னார். அவருக்காக நடனமாடிய G1,கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. போதுமான அளவு சிறப்பாகச் செயல்படாததற்கு விரைவாக மன்னிப்பு கேட்டது.
ஜாங் ஜென்யுவான் அது மீது கோவம் கொள்ளவில்லை. உடனே அந்த ரோபோட், நீ என் மேல் கோபப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் போதுமான அளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்பதுதான் காரணம் என்று கூறியது. மகிழ்ச்சியுடன் ரோபோவை கட்டிபிடித்துக் கொண்டார். உணர்ச்சி ரீதியான மதிப்பை வழங்க எனக்கு இனி ஒரு காதலி தேவையில்லை... ரோபோ எனக்கு தனிமையை உணரவே விடாது என்று ஜாங் மனம் திறந்து கூறினார். அந்த வீடியோ ஜாங் பேசுவதுடன் முடிவடைகிறது.
அதில் நாளைக்கு உன்னைத் திருப்பி அனுப்ப வேண்டும். நான் உன்னை மிஸ் பண்ணப் போகிறேன் எனக்கூறிக்கொண்டே ஜாங் அந்த ரோபோவை மெல்ல கட்டி அணைக்கிறார். சீனாவில் இதுபோன்ற வாடகை சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. பிப்ரவரியில், தெற்கு சீனாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மனித காவல்துறை அதிகாரிகளுடன் மனித உருவ ரோபோக்களும் இணைந்து ரோந்து பணி செய்தன என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: இந்தியா வரியை குறைத்தாலும் நான் குறைக்க மாட்டேன்... உச்சக்கட்ட பிடிவாதத்தில் டிரம்ப்!!