பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ள நிலையில், அந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக உதகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு..
திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை எழில், உதகைக்கு வந்ததால் பெருமையடைகிறேன். திமுக ஆட்சியில், நீலகிரியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவோடு வளர்ச்சியை நோக்கி திராவிட மாடல் ஆட்சி.இந்தியாவில் பட்டினி சாவு இல்லாத மாநிலம் என நிரூபித்துள்ளோம்.நாட்டிலேயே தமிழ்நாடு அதிக வளர்ச்சியை எட்டி உள்ளது.
இதையும் படிங்க: 10 எஸ்.பி., 15 டிஐஜி... ஹை அலர்ட்டில் ராமேஸ்வரம்... பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி அவர்களே.. தமிழ்நாட்டு மண்ணில் நின்று இந்த உறுதிமொழியை அளிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதமர் உறுதியளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த வகையிலும் தொகுதிகள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை பிரதமர் மோடி போக்க வேண்டும். உதகையில் விழாவில் பங்கேற்றுள்ளதால் பாம்பனில் நடக்கும் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் வரவில்லை. அம்மையார் ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நீட் தேர்வை திணித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்தனர். நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா? பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது நீட் எதிர்ப்புக்காக இபிஎஸ் குரல் கொடுத்துள்ளாரா?
வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து ஆ.ராசாவும், திருச்சி சிவாவும் நாடாளுமன்றத்தில் முழங்கினர். வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.தமிழ்நாட்டின் வலிமையை குறைக்க பாஜக துடியாய் துடிக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு முதலமைச்சர் விளக்கம் தந்துள்ளார்.
இதையும் படிங்க: எதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டம்..? கேள்வி எழுப்பிய இபிஎஸ்.. உதயநிதி சொன்ன நீட் விலக்கு ரகசியம் எங்கே..?