மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்..!
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார்.
முதலில் வக்பு என்றால் என்ன என்று தெரிந்துகொண்டால் இதன் உள்ளார்ந்த சிக்கல்களை உணர்ந்து கொள்ள முடியும். வக்பு என்பது இறைக்கொடை. அதாவது இறைப்பணிக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தான் வக்பு எனப்படுகின்றன. இவற்றை நிர்வகிக்கும் குழுவினர் தான் வக்பு வாரியத்தினர்.
இதில் தான் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அவர்கள் கொண்டு வந்துள்ள திருத்தம் என்ன?. ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) (UMEED). சுருக்கமாக உமீத். இந்த சட்டத்திருத்தம் கூறுவது என்ன?. இஸ்லாம் அல்லாத ஒருவர் அல்லது 5 வருடங்களாக இஸ்லாத்தை பின்பற்றாத ஒருவர் வக்பு அதாவது நன்கொடை கொடுக்க இயலாது. அதேபோன்று இரண்டு வகையான வக்புகள் உள்ளன. ஒன்று அல்லாவுக்கு என்று நிரந்தரமாக எழுதிக் கொடுக்கப்படும் சொத்துக்கள். இரண்டாவது தர்மமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் கவனித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு கட்டிடம் வக்பு சொத்தாக கொடுக்கப்பட்டால் அதன் மாதவாடகை, வருவாய் போன்றவற்றை வாரிசுகள் கையாள முடியும்.
இதையும் படிங்க: அங்கன்வாடியில் 16,000 காலி பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும்.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..!
இந்த இரண்டாவது வகையான நன்கொடையில் தான் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது கையாள்வதில் அக்குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் உரிமை தருவது. ஒருவேளை அந்த சொத்தில் தகராறு ஏற்பட்டால் இனி வக்பு வாரியம் முடிவு எடுக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுத்து அது வக்புக்கு உரிய சொத்தா? இல்லையா? என்பதை முடிவு செய்வார்.
அதேபோன்று வக்பு கவுன்சில் என்ற ஒன்றை இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்துகிறது. இதுவரை இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மட்டும்தான் இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இனி முஸ்லீம் அல்லாத இரண்டு பேர் இந்த கவுன்சிலில் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இருக்கின்ற கவுன்சில் இஸ்லாமிய உறுப்பினகளில் இரண்டு பெண்களும் இடம்பெற வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஷியா, சன்னி தவிர போஹ்ரா, அககானி ஆகிய இஸ்லாமிய பிரிவுகளுக்கு என்று தனித்தனியாக வக்பு வாரியங்கள் உருவாக்கப்படும் என்பதும் திருத்தங்களில் ஒன்று.
இத்தகைய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது.
ஆனால், அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தினை திருத்துவதற்கு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு திருத்தச் சட்டமுன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக ஆவேசம்..!