×
 

மாநில உரிமைகளை மீட்க குழு.. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரை..!

மாநில உரிமைகளை மீட்க குழு அமைக்கப்படுவதாக சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

5 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். 

நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் மருத்துவ கனவுகள் சிதைந்துள்ளதாகவும் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். பறிக்கப்பட்ட மாநில உரிமைகளை மத்திய அரசிடம் போராடி பெறும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்று கூறினார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் 2500 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது எனவும் கூறினார்.

பொதுக் கல்வி முறையை நீட் தேர்வு சிதைக்கிறது அதனால் அதை எதிர்க்கிறோம் என்று தெரிவித்த முதலமைச்சர், மும்மொழி கொள்கை என்ற போர்வையில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில பட்டியலில் உள்ள மருத்துவம், சட்டம், நிதி உள்ளிட்ட துறைகளை மடைமாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: தமிழை அரசியல் பிழைப்பு மொழியாக பயன்படுத்துகிறார்கள்... திமுகவை போட்டுத்தாக்கிய நயினார் நாகேந்திரன்!!

மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு மருத்துவக் கல்விக் கொள்கையை நீர்த்துப்போக செய்கிறது என்றும் மாநில அரசுகளின் தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தண்டனை விதிப்பதாகவும் கூறிய அவர், மக்களவை தொகுதி மறு வரையறை தொடர்பாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.நாம் இயற்றிய சட்ட முன் வடிவுகள் மீது ஆளுநர் காலம் தாழ்த்திய விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு கிடைத்து உள்ளதாகவும்,அதே நேரம் மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து மத்திய அரசு அதிகாரத்தை குவித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் உரிமைகளை மீட்டு எடுப்பது குறித்த பரிந்துரைகளை வழங்க குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே முதலமைச்சர் உரையின்போது சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: சட்டமேதை அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share