தமிழர்களின் தனித்துவமான குணம் சுயமரியாதை.. அதை சீண்டி பாக்காதீங்க..! எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு, அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் ஒன்று எழுதி உள்ளார். அதில், இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள் என்று இங்கேயுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள், அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாகத் தமிழ் மீது இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து நின்று 1937 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மையாக நின்றதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் கான்ஸ்டபிள்களின் மனநிலையை மதிப்பீடு செய்க- முதலமைச்சருக்கு பரிந்துரை!
சென்னை மாகாணமாக இருந்த அன்றைய தமிழ்நாடெங்கும் ஆதிக்க இந்திக்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன, மாநாடுகள் நடத்தப்பட்டன என கூறியுள்ள அவர், துறையூரில் 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்றவர் 28 வயது இளைஞரான அறிஞர் அண்ணா அவர்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை கட்டாயப் பாடமாக்கும் செயல்களை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டக் களம் புகுந்தனர் தமிழர்கள் என்றும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசினுடைய திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு முழுவீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம் என்றும் சட்டத்தின் முன்பும் நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழைக் காப்போம் எனவும் சூளுரைத்துள்ளார்.
இதையும் படிங்க: இது இன்ப தமிழ்நாடு, இங்கு ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு! தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்