×
 

இது மணிப்பூர் இல்ல.., தமிழ்நாடு..! பேரவையில் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர்..!

பல தடைகளைத் தாண்டி திராவிட மாடல் அரசு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

சட்டசபையில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: கலைஞர் இன்று நம்மோடு இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை என்று கூறி இருப்பார். கலைஞர் எண்ணங்கள்தான் இந்த அரசின் செயல்கள். என் 60 ஆண்டு கால பொது வாழ்வு குறித்து ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று கலைஞர் முன்னதாக கூறியிருந்தார். இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை.., திராவிடம் மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கும் உயரம் இந்தியாவே காணாதது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க மக்கள் திமுகவை ஆட்சி பொறுப்பில் அமர்த்தினார்கள். தமிழ்நாட்டில் திமுக அரசு செய்த சாதனைகளால் மீண்டும் ஏழாவது முறையாக திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதுவரை தமிழ்நாடு அடையாத பொருளாதார வளர்ச்சி இது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி ஆறு புள்ளி ஐந்து சதவீதம் தான்., ஆனால், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3.58 லட்சம் ஆகும். இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருள்களில் தமிழ்நாடு 41.23 சதவீதம் பங்கு வகிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த சாதனைகளால் நடுநிலைப் பள்ளியில் இடைநிற்றல் என்பது இல்லை. பிஎச்டி படிக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம். அதிகமான மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான். அதிகளவு எம்பிபிஎஸ் இடம் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

இதையும் படிங்க: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாள்..! முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!

மிகச் சிறந்த நூறு பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு இன்று எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 1.4 சதவீதம் தான். கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர் கேட்டால் நிர்வாக அமைப்பு தரைமட்டத்துக்கு சென்றது. முதலீடுகளை இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நெல் உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலே பாம்பு கீழே நரிகள் ஒரு பக்கம் குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர் என தடைகளை தாண்டி சாதனை படைத்துள்ளோம். இது ஒரு கட்சியின் அரசு அல்ல கொள்கையின் அரசு., ஸ்டாலின் அரசு என்று சொல்லிக் கொள்ளாமல் திராவிட மாடல் அரசு என்றே சொல்லி வருகிறேன்.

மத்திய அரசு, ஆளுநர், நிதி நெருக்கடி என தடைகளை தாண்டி சாதனை படைத்துள்ளோம். ஏப்ரல் மாதம் என்பது தமிழகத்திற்கு ஏற்றம் கொடுக்கக்கூடிய மாதமாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். சாதி கலவரம், வன்முறை தமிழகத்தில் இல்லை. வன்முறை செய்ய வேண்டும் என சிலர் நினைத்தாலும் தமிழக மக்கள் முறியடித்துள்ளனர். குற்றச்சம்பவம் நடந்தால் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு என்பது மணிப்பூர் அல்ல., காஷ்மீர் அல்ல., இது தமிழ்நாடு மறந்துவிட வேண்டாம்... உத்திரபிரதேச கும்பமேளா மரணங்கள் தமிழகத்தில் நடக்கவில்லை. நான்கு ஆண்டு சாதனைகளை புத்தகமாக வழங்கி உள்ளோம்.. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பிடிவாதமாக இருப்பவன் நான் அல்ல. காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிங்க: போலீசாருக்கு வார விடுமுறையை உறுதி செய்யுங்கள்..! மதுரை கோர்ட் கரார் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share