×
 

அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்..! அரசு செவி சாய்க்குமா? வேதனையில் காத்திருக்கும் விவசாயிகள்..!

வெள்ளை ஈ உள்ளிட்ட நோய் தாக்குதலால் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்கள் அழியும் தருவாயில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்று தென்னை விவசாயம். 29 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருவது வேதனையின் உச்சம். இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இதன் காரணமாக இளநீர் மற்றும் தேங்காய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நோய் தாக்குதல் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் சற்று அதிகரித்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பா.? கலங்கி நிற்கும் விவசாயிகள்.. அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை!!

இதன் தாக்கத்தை அறிந்து பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசியுள்ளார். தென்னை மரங்கள் அழிந்து விட்டால் அதை வெட்டி எடுத்து விட்டு வேறு விவசாயம் செய்ய முடியாது என்றும் கேரள மஞ்சள் வாடல் நோய் தாக்குதல், தஞ்சாவூர் வாடல் நோய், கேரள வாடல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் ஆகியவை தென்னை விவசாயத்தில் அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

வெள்ளை ஈ தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்து விடும் என்று எச்சரித்த அவர், தேங்காயை ஏற்றி சென்ற லாரிகளில் தற்போது தென்னை மரங்களை ஏற்றி செங்கல் சூளைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

காமராஜர் ஆட்சியின் போது நிலக்கடலை பயிர்களில் கம்பளிப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதாகவும், அப்போது நான்கு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு விமானத்தின் வாயிலாக மருந்தடித்து நிலக்கடலை பயிர்களை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டு பேசினார். ஆனால் வெள்ளை ஈ தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசு மருந்துகள் கண்டுபிடிக்க முன்வராத நிலையில் தான், தற்போது பேரழிவு ஏற்பட்டு கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி இந்த நோய் தாக்குதல் குறித்து பேசி இருக்கிறார். கேரளாவை விட பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, ஆனைமலை, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட நாற்பதுக்கும் அதிகமான இடங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது என்றும் கேரள வாடல் நோய் தாக்குதல் காரணமாக கோவையில் தற்போது சுமார் 5,000 ஏக்கரிலான தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 40 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டப்பட இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டி அகற்ற இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என தெரிவித்த அவர் மீண்டும் நடவு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய், ஆக மொத்தம் 3 லட்சம் செலவாகிறது எனக் கூறினார். ஆனால் மறு நடவு செய்ய ஹெக்டேர் ஒன்றுக்கு 32,000 மட்டுமே தமிழக அரசு வழங்கி வருவதாகவும் 50 சதவீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். 

வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 6 ஆண்டு காலமாக அரசின் நிதியை மட்டும் வாங்கி எந்தவித ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாமல் காலத்தை வீணடித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், வெள்ளை ஈ தாக்குதலால் தமிழக முழுவதும் ஏக்கர் கணக்கிலான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 60% உற்பத்தி குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 29 மாவட்டங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக அரசு குறைந்தபட்சம் 800 கோடி ரூபாயை போர்க்கால அடிப்படையில் ஒதுக்கி உரிய மருத்துவத்தை செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படியே தென்னை விவசாயம் அதளபாதாளத்திற்கு சென்று கொண்டு இருந்தால் தென்னை சார்ந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வது மட்டுமல்லாது தென்னை விவசாயம் அழிந்து மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மட்டும் இல்லாமல் தென்னை சார்ந்த பொருட்களும் கிடைக்காமல் போய்விடும் என்பதை மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.

இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share