கல்லூரி மாணவிக்கு தூக்கு தண்டனை...
விஷம் வைத்து காதலனை கொன்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு
நாட்டை உலுக்கிய இந்த கொடூர கொலை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நெய்யாற்றின் கரை விசாரணை நீதிமன்றம் இன்று இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து கொலை செய்த கல்லூரி மாணவி கரீஷ்மா (வயது 24) குற்றவாளி என்று, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது. தண்டனை விவரம் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து இன்று தண்டனை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது 23) . இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கரீஷ்மா (24) என்ற கல்லூரி மாணவி உடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கரீஸ்மாவுக்கு வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்திற்கு தனது காதலன் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்பதால் அப்பாவி காதலனை திட்டமிட்டு கரீஷ்மா கொலை செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: சென்னையில் போலீசில் தன்னை போட்டுக்கொடுத்த காதலியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற EX காதலன்
கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து இந்த கொலையை செய்தது போலீசார் புலன் விசாரணையில் தெரியவந்தது. விஷம் கலந்த கஷாயத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காதலன் சாரோன்ராஜ் 11 நாட்கள் நடந்த தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கில், கொலை செய்த கரீஷ்மா உடன், கொலைக்கான தடயங்களை அழிக்க உதவியதாக கரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி எம் எம் பஷீர் தீர்ப்பு கூறினார் . கரீஷ்மா, நிர்மல் குமார் ஆகிய இருவரையும் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் கரீஸ்மாவின் தாயார் சிந்துவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் கொலை குற்றவாளி கரீஸ்மாவுக்கு மரண தண்டனை( தூக்கு) விதிக்கப்பட்டது.
கரீஷ்மாவின் மாமா நிர்மல் குமார் நாயருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக குற்றவாளி என்ற தீர்ப்பு வழங்கிய அன்று தனக்கு குறைந்த படிச்ச தண்டனை வழங்கும் படி நீதிபதியிடம் கதறி அழுதபடி கரிஷ்மா வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவருடைய வேண்டுகோளை புறக்கணித்த நீதிபதி, முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொலை நடந்திருப்பதாலும், குற்றத்தின் கடுமையான தன்மையை கருதியும் உச்ச பட்ச தண்டனையான மரண தண்டனை ( தூக்கு) விதித்திருக்கிறார்.
"பாலியல் நெருக்கம்" என்ற சாக்கு போக்கில் ,காதலனை அவர் அழைத்து இந்த குற்றத்தை புரிந்ததை புறக்கணிக்க முடியாது. கரீஷ்மா கசாயத்தை கொடுத்த போது, அதில் சந்தேகப்பட்ட காதலன் அதை வீடியோ பதிவு செய்ய முயன்றதையும், ஆனால் அதை கரீஷ்மா தடுத்து விட்டதையும் கவனிக்கத்தக்கது.
விஷம் கொடுக்கப்பட்ட ஷாரோன் 11 நாட்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் உயிருக்கு போராடி இருக்கிறார். தனது காதலனுக்கு கரீஷ்மா நம்பிக்கை துரோகம் செய்து, உணர்ச்சி வசப்பட்டு அவரை ஏமாற்றியதையும்" இந்த உச்ச பட்ச தண்டனைக்கு காரணமாக நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் "கரீஷ்மா குறிப்பிட்டது போல் காதலனுக்கு மன அழுத்தம் இருந்ததையோ அல்லது தன்னை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக வைத்த வாதத்தையோ நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக எந்த ஒரு சமயத்திலும் காதலன் ஷாரோன் கரீஷ்மாவை குற்றம் சாட்டியது இல்லை. காதலி கரீஷ்மாவுக்கு ஷாரோன் விசுவாசமாக இருந்த போதும், முன்கூட்டிய திட்டமிடப்பட்டு கொலை நடந்துள்ளது. ஆவேசத்துடன் திடீரென்று ஆத்திரத்தில் நடந்த கொலை அல்ல இது. குற்றத்தை மறைப்பதற்காக கரீஸ்மா மேற்கொண்ட தந்திரமான முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. குற்றத்தின் தீவிர தன்மையை கருதும் போது தனது இளமைப் பருவம் பற்றிய கரீஷ்மாவின் தண்டனை குறைப்பு வாதத்தை கருத்தில் கொள்ள முடியாது."
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை கடத்தல் விஷம் கொடுத்தல் நீதியை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை முயற்சி : பின்னணி தகவல்கள்
காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கிரீஸ்மா யோசித்தார். ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். ஒரு முறை பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷாரோன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கரீஸ்மா கொடுத்தார். ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் குடித்தார். தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.
இந்நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது, முன்னதாக கரீஷ்மாவின் வயதைக் கருத்தில் கொண்டும், அவர் திருந்தி வாழ தயாராக இருப்பதை சுட்டிக் காட்டியும் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டாம் என அவரது வழக்கறிஞர் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது அதே நேரத்தில். போலீஸ் தரப்பில் குற்றவாளிக்கு உச்ச பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: இந்தியாவின் ரூ.5,600 லட்சம் கோடி சொத்துக்களை ‘கபளீகரம்’ செய்த பிரிட்டனின் 10% கோடீஸ்வரர்கள்...