தொகுதி மறுசீரமைப்பு... திமுக சொல்வது உண்மையா?...மடைமாற்ற அரசியலா?..உண்மை நிலை என்ன?
தொகுதி மறு சீரமைப்பு குறித்து பாராளுமன்றமே விவாதிக்காத நிலையில் புலி வருது, புலி வருது என திமுக மடைமாற்ற அரசியல் செய்வது ஏன்? தொகுதி மறு சீரமைப்பு எப்படி நடக்கும், எத்தனை ஆண்டுகள் ஆகும், சட்ட நடைமுறை என்ன என்பதெல்லாம் குறித்து இந்த கட்டுரை விவாதிக்கிறது.
மறுசீரமைப்பு சாத்தியத்திற்கான காரணிகள்:
மக்கள் தொகை மாற்றம்: மக்கள் தொகை அதிகரிப்போ அல்லது குறைவோ இருந்தால் தொகுதி மாற்றம் தேவையாகலாம்.
அரசியல் தேவைகள்: சில அரசியல் கட்சிகள், பிரதேச இடமாற்றங்கள், அல்லது சமூக நீதி காரணமாக மாற்றம் வேண்டியிருக்கலாம்.
பிரதேச ஒழுங்குமுறை மாற்றங்கள்: நகரங்களின் விரிவாக்கம், கிராமப்புற மேம்பாடு போன்றவை தொகுதி வரையறையை மாற்றலாம்.
சட்ட செயல்முறை: இந்தியாவில், தொகுதி மறுசீரமைப்பு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) மூலம் நடத்தப்படுகிறது.
மறுசீரமைப்பு எப்போது நடக்கும்?
இது பொதுவாக மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக அல்லது ஒழுங்காக சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்தியாவில் கடைசியாக 2002-2008 இடையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது. புதிய மறுசீரமைப்பு 2026-க்கு பிறகு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்கிறது என்று சில அறிக்கைகள் வெளிவந்தாலும், இது சட்டப்பூர்வமாக இன்னும் நடைமுறையில் வரவில்லை.
இதையும் படிங்க: குறட்டை விட்டு தூங்குகிறது திமுக அரசு.. சட்டம் ஒழுங்கு பற்றி அன்புமணி விளாசல்..!
தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் (Delimitation Commission)
இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு சுயேட்சையாக செயல்படும் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தால் (Constitutional Body) மேற்கொள்ளப்படும். தற்போதைய சட்டத்தின்படி, 2026-க்கு பிறகுதான் மறுசீரமைப்பு மீண்டும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*நடைமுறையில் என்ன நடக்கிறது?
மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் தொகுதி வரையறைகளை மாற்ற முடியாது. மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகள், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2026-க்கு பின் மறுசீரமைக்கப்படும் என 42வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் (1976) மூலம் முடிவு செய்யப்பட்டது. அதுவரை, 1971-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
*சமீபத்திய விவாதங்கள் & கருத்துக்கள்
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு COVID-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சில அரசியல் தரப்புகள் மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் புதிய தொகுதிகள் உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. தென்னிந்திய மாநிலங்கள் குறைவான தொகுதிகளை வைத்திருக்க, வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அரசியல் சமநிலை மாற்றமடைந்துவிடும் என்ற விவாதம் உள்ளது.
தற்காலிகமாக எந்த மாற்றமும் இல்லை
சட்டப்படி 2026-க்கு முன்னர் எந்த தொகுதி மறுசீரமைப்பும் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், அரசியல் சர்ச்சைகள் மற்றும் மக்கள் தொகை சமநிலையின் பெயரில் சில மாற்றங்கள் முன்மொழியப்படலாம்.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) ஒரு மிகப்பெரிய மற்றும் சிக்கலான செயல்முறையாகும். இது பொதுவாக 2 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும். ஆனால், முழுமையான தகவல்களை அனலைஸ் செய்ய, தகவல் வெளியிட, மற்றும் முடிவுகள் செயல்படுத்த மேலும் 3-4 ஆண்டுகள் ஆகலாம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் நடைமுறை என்ன? எப்படி நடக்கும்?
முதல் பணி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். புள்ளிவிவர முறை நிர்ணயிக்கப்படும். நாடு முழுவதும் தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு – வீட்டு பட்டியல் (House Listing) (6-12 மாதங்கள்) ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்களை பதிவு செய்யும் பணி. குடியிருப்பு, அடிப்படை வசதிகள், தொழில்நிலை போன்றவை பதிவு செய்யப்படும்.
2. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு – மக்கள் தொகை விபரங்கள் (Population Enumeration) (6-12 மாதங்கள்) குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். வயது, கல்வி, வேலை, மொழி, மதம், இனப்பிரிவு போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படும்.
3. தகவல் திருத்தம் மற்றும் தரவுகள் பரிசோதனை இதற்கு 1 லிருந்து 2 வருடங்கள் ஆகும். அதன் பின்னர் திருத்தங்கள், தவறுகளை சரி செய்தல், விவரங்களை மீண்டும் சரிபார்ப்பது.
4. முடிவுகளை வெளியிடுதல் (1-2 வருடங்கள்)
இறுதி முடிவுகளை அரசு, ஆய்வாளர்கள், பொதுமக்களுக்கு வெளியிடுதல் நடக்கும். திட்டமிடல் மற்றும் கொள்கை அமல்படுத்துதல். இதற்கு மொத்தமாக எத்தனை வருடங்கள் ஆகும்? என்றால் குறைந்தபட்சம் 2 லிருந்து 3 ஆண்டுகள் (தகவல் சேகரிக்க & ஸ்க்ரூட்னிஸ் செய்ய) அதிகபட்சமாக முழுமையான தகவல் வெளியிட & செயல்படுத்துவதற்கு 5-6 ஆண்டுகள் ஆகும்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு COVID-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே, 2024 அல்லது 2026-ல் ஆரம்பமானால், இறுதி முடிவுகள் 2029 அல்லது 2030-ல் கிடைக்கலாம். அதிலும் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இது இன்னும் தள்ளிப்போகும். இடையில் அகில இந்திய பொதுத்தேர்தல் 2029-ல் நடக்கும் இதனாலும் பணிகள் தள்ளிப்போகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையறை (Delimitation) எவ்வாறு செய்யப்படும்?
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு நடக்கும், இதை இந்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் (Census Commission) முடிவுகளை வெளியிடும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் தொகை மாற்றங்களை அரசாங்கம் கணிக்கிறது.
தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission)
அதன் பின்னர் தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission) அமைக்கப்படும். இந்திய அரசியல் சட்டத்தின் படி, தொகுதி மறுவரையறை செய்வதற்கான அதிகாரம் தொகுதி மறுவரையறை ஆணையத்திடம் உள்ளது. இது பாராளுமன்றம் அல்லது மாநில அரசால் நேரடியாக மாற்ற முடியாது. இறுதி முடிவுகள் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு போட்டு மாற்ற முடியாது.
புதிய தொகுதி வரையறை செய்வது எப்படி?
ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறு வரையறை செய்யப்படும். புதிய தொகுதிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும், அல்லது சில தொகுதிகள் சேர்க்கப்படும் / பிரிக்கப்படும். ஒரே மாநிலத்திற்குள் தொகுதி மாற்றம் செய்யலாம், ஆனால் மாநிலங்களுக்கு இடையே தொகுதி மாற்றம் செய்ய முடியாது.
தொகுதி கூட்டும்-குறைக்கும் உத்தரவுகள் யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு:
அதிக மக்கள் தொகையுள்ள பகுதிகளில் புதிய தொகுதிகள் உருவாக்கலாம். மக்கள் தொகை குறைந்த பகுதிகளில் உள்ள தொகுதிகள் இணைக்கப்படலாம். இதனால் வட இந்திய மாநிலங்கள் அதிக தொகுதிகளை பெறலாம், தென் இந்திய மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறையலாம்.
இறுதி அறிக்கை & அரசியல் செயல்முறைகள்:
ஆணையம் தனது பரிந்துரைகளை மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்கும். இறுதியாக, புதிய தொகுதிகள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும், பிறகு தேர்தலுக்கு அமலாகும்.
தற்போது திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?
இந்தியாவில் கடைசி தொகுதி மறுவரையறை 2002-2008 காலத்தில் நடந்தது. தற்போது, புதிய தொகுதி மறுவரையறை 2026-க்கு பிறகு மட்டுமே நடைபெறும் என அரசியல் சட்டத்தில் (42nd Amendment, 1976) குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கவலை
இந்த முறை, மக்கள்தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்படலாம் என்பது திமுக உள்ளிட்ட தென் மாவட்ட கட்சிகளின் ஒரு முக்கியமான விவாதமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) தொடர்பான விவாதங்கள் தற்போதைய அரசியல் சூழலில் முக்கியமானதாக உள்ளன. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்வது தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது அரசியல் தலைவர்களிடையே கவலைக்குறியதாக பார்க்கப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு பாராளுமன்றத்தில் விவாதம்:
தற்போது, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடைபெறவில்லை. இருப்பினும், மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறை பற்றிய அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்று வருகின்றன. இது, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திமுக முக்கியமாக நாளைக்கே தொகுதி மறு சீரமைப்பு நடப்பதுபோல் இருக்கிற பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி இதுதான் பெரிய பிரச்சனை போல் மடைமாற்றும் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.
திமுக மடைமாற்ற அரசியல் செய்கிறதா?
மாநில அரசை வறுத்தெடுக்கும் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் விதத்திலும் மக்களுக்கு அரசின் மீதுள்ள இயல்பான கோபத்தை மத்திய அரசை நோக்கி திருப்பும் மலிவான பிரச்சாரத்துக்காகவும், அமலாக்கத்துறை ரெய்டு போன்ற விவகாரங்களை மறக்கடிக்க இந்த பிரச்சனை ஏதோ தலைபோகிற பிரச்சனை போல் தென் மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித்தலைவர்களை அழைத்து கூட்டம் போடுவதாக உள்ள குற்றச்சாட்டை மறுக்க முடியாது.
தமிழக அரசு கூட்டிய கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லாம் தற்போதைய பிரச்சனை அல்ல என்று வந்தவர்களுக்கும் நன்றாக தெரியும். அதேபோல் கர்நாடகாவுடன் மேகதாட்டு பிரச்சனை உள்ளது அது பின்னுக்கு தள்ளப்பட்டு கைகோர்த்து இதை முக்கிய பிரச்சனை போல் காட்டினர். கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்சனை, மருத்துவ கழிவுகள் பிரச்சனை பற்றி பேசாமல் இதை பெரிய பிரச்சனைபோல் காண்பிப்பது நடக்கிறது.
பாராளுமன்றத்தில் எதிர்கால நடவடிக்கைகள்
தொகுதி மறுசீரமைப்பு என்பது தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission) மூலம் மேற்கொள்ளப்படும். இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படலாம். எனினும், தற்போதைய நிலையில், பாராளுமன்றத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ விவாதம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் இதுதான் முக்கிய பிரச்சனை போல் இரு அவைகளிலும் திமுக அதன் தோழமைக்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது, படகுகள் பறிமுதல் விவகாரம் பற்றி அழுத்தம் தராததும், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மேகதாட்டு அணை கட்டியுள்ளதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் இவர்களின் தமிழக மக்கள் நலனை கண்டுக்கொள்ளாத அரசியலாக பார்க்கப்படுகிறது. சரி எதிர்க்கட்சிகள் பயம் குறித்து பார்ப்போம்.
பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய முடியுமா?
இல்லை, பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) செய்ய முடியாது. இதற்கு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) மற்றும் பாராளுமன்றத்தின் இணக்கம் தேவையாகும். இதற்கு தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் அமைக்கப்படவேண்டும். தொகுதி மறு சீரமைப்பின் நடவடிக்கைகள் என்னென்ன பார்ப்போம்.
தொகுதி மறுசீரமைப்பின் சட்ட நடைமுறைகள்
1. தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைப்பு:
இந்திய அரசியலமைப்பின் 82வது மற்றும் 170வது சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தை (Delimitation Commission) அமைக்கும். இந்த ஆணையத்தை மத்திய அரசு சுயேச்சையாக நியமிக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், ஆணையம் தொகுதி வரம்புகளை மாற்றுவதற்கான திட்டத்தை உருவாக்கும். இது மாநிலங்கள், தேர்தல் ஆணையம், மற்றும் பொதுமக்கள் கருத்துகளைப் பெறும்.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல்:
மறுசீரமைப்பு திட்டம் நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும். இரு அவைகளும் (மக்களவை, ராஜ்யசபா) இதை விவாதித்து சட்டமாக நிறைவேற்ற வேண்டும். பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காமல் தொகுதி மாற்றங்கள் செயல்படுத்த முடியாது. அதற்கு இரு அவைகளிலும் மெஜாரிட்டி அவசியம்.
ஒப்புதல் கிடைத்தப்பின் திட்டத்தை செயல்படுத்தல்:
மத்திய அரசு, தேர்தல் ஆணையம் இணைந்து புதிய தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இதன்பிறகு புதிய தேர்தல் வரைபடம் அமலுக்கு வரும். தொகுதி மறுசீரமைப்பு என்பது அரசியல் கட்சிகள் தனிப்பட்ட
முறையில் முடிவெடுக்க முடியாத ஒரு செயல்முறை.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் மறுசீரமைப்பு செய்ய முடியாது, அரசியல், புவியியல், சமூக சமநிலை போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நீதிமன்றம் கூட மறுசீரமைப்பு ஆணையத்தின் முடிவுகளை வழக்கில் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் அது இறுதி முடிவாக கருதப்படும்.
இந்தியாவில் கடைசி தொகுதி மறுசீரமைப்பு 2002-2008-ல் நடந்தது. 42வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் (1976) படி, 2026-க்கு முன்பு மறுசீரமைப்பு நடக்க முடியாது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே அமலுக்கு வரும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியவே 3 ஆண்டுகள் ஆகும்
2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கினால், தொகுதி மறுசீரமைப்பு மொத்த செயல்முறைக்கு குறைந்தது 6-8 ஆண்டுகள் ஆகும். அதாவது, 2032-2034 இடையே தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைபூர்வமாக முடிந்து, புதிய தொகுதிகள் அமலுக்கு வரலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு (2026-2028) 2-3 ஆண்டுகள், 2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கினால், அதில் தரவுகள் சேகரிக்க, சரிபார்க்க, மற்றும் முடிவுகளை வெளியிட 2028-29 வரை ஆகலாம். இடையில் 2029-ல் பாராளுமன்ற தேர்தல், அதன் பின்னர் புதிய தொகுதி அமைக்கப்பட்டு மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தால் 2030 கூடுதலாக 2 ஆண்டுகள் ஆகும்.
மக்கள் கருத்துக்கேட்பு
மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) அமைக்கும். 2032-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரைகள் உருவாக்கும். புதிய தொகுதிகள் எவ்வாறு வரையறுக்கப்படும் என்பது தொடர்பாக மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்படும். தொகுதி வரம்புகள், மக்கள் தொகை அடிப்படை, சமூக மற்றும் புவியியல் காரணிகள் ஆய்வு செய்யப்படும்.
பாராளுமன்றத்தில் ஒப்புதல் வேண்டும்
பாராளுமன்ற ஒப்புதல் & சட்ட திருத்தம் (2032-2034) 2 ஆண்டுகள், பின்னர் தொகுதி மறுசீரமைப்பு முடிவுகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். இரு அவைகளும் சட்ட திருத்தங்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். புதிய தொகுதி வரைபடம் வெளியீடு (2034-2035) 2 ஆண்டுகள் ஆகும். அதன் பின்னரே மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் புதிய தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். புதிய தொகுதிகள் அமலுக்கு வந்து, தேர்தல்கள் நடக்கும். இந்த நடைமுறை 2026-ல் தொடங்கினால் தொகுதி மறுசீரமைப்பின் முக்கிய கட்டங்கள் முடிய குறைந்தது 6-8 ஆண்டுகள் ஆகும்.
முக்கிய சிக்கல்கள், தடைகள் என்னென்ன?
தென்னிந்திய மாநிலங்களின் எதிர்ப்பு
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா) தொகுதிகள் குறைவதற்கான அபாயம் உள்ளது. இது வட இந்திய மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சிகள் & சமூக அமைப்புகள் இதை எதிர்க்கலாம். சில மாநிலங்களில் சட்டவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
புதிய தொகுதிகள் எந்த அடிப்படையில் வரையறுக்கப்படும்?
மக்கள் தொகை (Population-Based) – அதிக மக்கள் உள்ள இடங்களுக்கு அதிக தொகுதிகள். புவியியல் (Geographical Consideration) – ஏற்கனவே பெரும் பரப்பளவுள்ள தொகுதிகள் மாற்றப்படும். சமூக நீதிப் (Social Balance) – இடஒதுக்கீடு அடிப்படையிலான தொகுதி மாற்றம். புதிய தேர்தல் வரைபடம் 2034 பாராளுமன்ற தேர்தலில் புதிய தொகுதிகள் அமலுக்கு வரலாம் அல்லது தள்ளிபோகலாம்.
இதெல்லாம் நடக்க இன்னும் 10 ஆண்டுகள் இருக்கையில் இப்போதைக்கு தமிழக அரசு இதை கையில் எடுப்பது முழுக்க முழுக்க மடை மாற்றும் அரசியலே. இதுவரை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் வெளியிடவில்லை, ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மறுபுறம் தொகுதி மறு சீரமைப்பு மூலம் வட இந்திய இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைப்பதால் RSS, பாஜக உள்ளிட்ட வட மாநில அரசியல் தரப்புகள் இதை ஆதரிக்கலாம், ஏனெனில் இது வட இந்திய மாநிலங்களுக்கு அதிக மக்களவை தொகுதிகளை தருவதால் அரசியல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு. பாராளுமன்றத்தில் தற்போது இதுபற்றி விவாதம் நடத்தப்படவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இது நடைபெற வாய்ப்பு உள்ளது.
திமுகவின் மடைமாற்ற அரசியல்
2026-2034 வரை தொகுதி மறுசீரமைப்பு வேலைகள் நடைமுறையில் இருக்கும். பாராளுமன்ற ஒப்புதல் அவசியம், அது அரசியல் விவாதம் இல்லாமல் நடக்காது. அதனால் புதிய அரசு வரும்போது அந்த சிக்கலை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதும் பார்க்கப்படவேண்டியது அவசியம். அது தென்னிந்திய மாநிலங்களுக்கு அரசியல் மற்றும் தொகுதி எண்ணிக்கையில் நன்மை பயக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தலாம். ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பிரச்சனையை இப்போதே கையில் எடுத்து அரசியல் செய்வது மடைமாற்ற அரசியலாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 1000 ஆடுகளை அறுத்தால் பக்ரீத்.. ஒரே ஒரு ஆட்டை அறுத்தால் தேர்தல்… அண்ணாமலையை வம்பிழுக்கும் செந்தில் பாலாஜி..!