விசிக தலைவர் திருமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய விவகாரம்... கூல் சுரேஷ் காட்டம்..!
சாதி பார்த்து பழகும் எண்ணம் எனக்கு கிடையாது, விசிக தலைவர் திருமாவளவன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதில் என்ன தவறு இருக்கிறது..? என்று நடிகர் கூல் சுரேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திரையரங்குகளில் புது படங்கள் வெளியே வந்தால் முதல் பேட்டி கூல் சுரேஷாக தான் இருக்கும். அப்பொழுது அவர் பேசும் வார்த்தை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும். அப்படி இருக்க, மஞ்சள் வீரன் இயக்குநர் செல்லம், டிடிஎப் வாசன் கதாநாயகனாக இனி படத்தில் தொடரப்போவதில்லை என்ற அறிவிப்பை கொடுத்த உடன் மஞ்சள் வீரன் திரைப்படத்திற்கு இனி நான் தான் கதாநாயகன் என பெரிய புயலையே ஏற்படுத்தினார். அந்த செய்திகள் காலப்போக்கில் மறைந்து போக, திடீரென ஒருநாள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், அதே நிகழ்ச்சியில் பங்கு பெற்ற விசிக தலைவர் திருமாவளவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
அப்போது, தனக்கு சால்வை அணிவித்ததை போல் நடிகர் கூல் சுரேஷ்-க்கும் சால்வை அணிவிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கும் மேடையிலேயே சால்வை அணிவிக்கப்பட்டது. இந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாக, பலரும் கூல் சுரேஷை விமர்சித்தனர். இதனால் மனவருத்தத்தில் அமைதியாக இருந்த கூல் சுரேஷ், சென்னை பிரசாத் ஸ்டூடியோவில், தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டார். இயக்குநர் ரவி மரியா, நடிகர் மகாநதி சங்கர் மற்றும் படக்குழுவினருடன் பூஜைகளை முடித்த கூல் சுரேஷ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த அவர், திடீரென ஆவேசமாகி, விசிக தலைவர் திருமாவளவன் ஒரு நல்ல அரசியல் தலைவர், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள கூடிய வாய்ப்பு உருவானது. இருப்பினும் மேடையில் அவர் இருப்பதை பார்த்த நான், அவரை தொந்தரவு செய்யாமல் ஓரமாகவே நின்றேன். அப்பொழுது என்னை பார்த்த அவர், தனக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்த வேண்டும் என திருமண வீட்டாரிடம் சொல்ல, அவர்களும் அப்படியே செய்தனர்.
இப்படி இருக்க அவருக்கு மரியாதை சேர்க்கும் வகையில் காலில் விழுந்து ஆசி பெற்றேன், அதற்காக தன்னை சிலர் ஷூ நக்கி, கால் நக்கி என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது எனக்கு மாம்பழமும் வேண்டும், சூரியனும் வேண்டும், பானையும் வேண்டும் என்று நினைப்பவன். அதுமட்டுமல்லாமல் பெரியவர்களை மதிப்பவன், இப்படி இருக்க விசிக தலைவர் திருமாவளவன் காலில் நான் விழுந்ததில் என்ன தவறு? யார் என்ன சாதி என்று பார்த்து பழகும் பழக்கம் எனக்கு கிடையாது. அப்படி இருப்பதால் தான், நான் இன்று கதாநாயகனாக மாறி இருக்கிறேன் என கூறினார். இப்படி ஆவேசமாக பேசிய கூல் சுரேஷ், ஹீரோயின் வந்ததும் சாந்தமாக மாறி இயல்பு நிலைக்கு திரும்பி சகஜமாக பேச ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: மோடியை பாராட்டிய சசிதருர்.. காங்கிரஸ் காரனாகவே இருக்க முடியாது - சசிதரூர் விளக்கம்