பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தியாகணும்.. மதசார்பற்ற சக்திகள் ஒன்னு சேருங்க.. அழைப்பு விடுக்கும் பிரகாஷ் காரத்.!!
பாஜவுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் தேசிய அரசியல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசுகையில், "பழந்தமிழ் இலக்கியம், கலாச்சாரம், பண்பாட்டின் செழுமை, தொழிலாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நகரமான மதுரையில் இந்த மாநாடு நடத்துவது பொருத்தமானது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீத்தாராம் யெச்சூரி இல்லாத கடினமான தருணத்தில் மா நாடு நடக்கிறது.
இங்கு 3 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். டொனால்டு ட்ரம்பின் நண்பர் என்று கூறுவது யாரை? கவுதம் அதானி, முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்? ஆர்எஸ்எஸ்க்கு யார் முழு விசுவாசமாக இருக்கிறார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் மோடிதான். பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிறுவனங்களின் கூட்டணியைப் போராடித்தான் தோற்கடிக்க வேண்டும். பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியை எப்படி எதிர்த்துப் போராடுவது என்ற கேள்வி சிக்கலானது. கருத்தியல், கலாச்சா சமூகத் துறைகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே, பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள். நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டது குறிப்பாக, ஒப்பந்தம் மூலம் தொழிலாளர் சுரண்டல் அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைக் குறைக்கும் 4 தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மே 20இல் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளும், அனைத்து வெகுஜன அமைப்புகளும் இதை வெற்றிபெறச் செய்யும்.
இதையும் படிங்க: பாஜகவை ஆட்டிப் படைக்கிறது ஆர்.எஸ்.எஸ்..! பிரதமரை வசைப்பாடிய டி.ராஜா..!
மக்களவையில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், எதேச்சதிகார முயற்சிகளை பாஜக நிறுத்தவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், அரசியலமைப்புத் திருத்த மசோதா, கூட்டாட்சி, மாநிலங்களின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். தேர்தல் ஆணையச் சுதந்திரத்தைச் சிதைப்பது தொடர்கிறது. பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதில் அப்பட்டமான பாரபட்சம் உள்ளது. பல நாடுகளுக்கு எதிராக டிரம்ப் ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்கிறார். இவருக்கு பிரதமர் மோடி விசுவாசமாக இருக்கிறார். இதன் விளைவு நமது நாட்டுக்கு மிக மோசமாக இருக்கும்" என்று பிரகாஷ் காரத் பேசினார்.
இதையும் படிங்க: சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தேதி குறிச்சாச்சு..!