சி.எஸ்.ஆர். நிதி மோசடி.. ஆயிரத்துக்கும் அதிகமான எப்.ஐ.ஆர் பதிவு - பினராயி விஜயன் தகவல்..!
கேரளாவில் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 1,343 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். இவர் கடந்த 2022-ல் சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பை தொடங்கினார். பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியை பெற்று, பொதுமக்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர், லேப்டாப் மற்றும் தையல் இயந்திரம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.
இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் அவரது தன்னார்வ அமைப்புகளில் பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர். ஆனால் அனைவருக்கும் ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை வழங்காமல் பெரும் தொகையை அனந்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக தெரிகிறது. இந்த மோசடி குறித்து சட்டப்பேரவையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.
இதையும் படிங்க: ஆளுநரோடு கைகோர்த்த பினராயி விஜயன்..! மத்திய அரசுக்கு நேரடி செக்..!
அப்போது, சிஎஸ்ஆர் நிதியின் பெயரில் நடந்த மோசடி தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 1,343 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது., இதில் 655 வழக்குகள் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன., இதில் இதுவரை 386 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக 49,386 பேரிடம் ரூ.281.43 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது என கூறினார்.
இதில் 16,438 பேருக்கு மட்டுமே ஸ்கூட்டர் தரப்பட்டுள்ளது.,மற்றவர்களுக்கு தரப்படவில்லை,.இதுபோல் பாதி விலையில் லேப்டாப் தருவதாக 36,891 பேரிடம் ரூ.9.22 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் 29,897 பேருக்கு மட்டுமே லேப்டாப் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை என குறிப்பிட்டு பேசினார்.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளான சங்கத்தின் செயலாளர் அனந்து கிருஷ்ணன், தலைவர் அனந்த குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 20-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் இவர்களின் சொத்துகளை முடக்க நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
சிஎஸ்ஆர் நிதி மட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்தும் தங்களுக்கு பணம் வருவதாக இவர்கள் கூறியுள்ளதாகவும் பயனாளிகளை சேர்க்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் களப் பணியாளர்களை நியமித்துள்ளனர் என்றும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் பினராயி விஜயன் கூறினார்.
இதையும் படிங்க: பெண்ணுடன் நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டல்..! ஜோதிடருக்கே விபூதி அடித்த பலே கும்பல்..!