பிரபல லேடி டான் சோயா கான் கைது..! ரூ.1 கோடி ஹெராயினுடன் தட்டி தூக்கிய போலீஸ்..!
டெல்லியின் பிரபல 'லேடி டான்' சோயா கானை போலீசார் கைது செய்தனர்.
தனது கணவரின் போதைப் பொருள் சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்தி வந்த டெல்லி பெண் தாதா ஒருவர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 270 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
பல ஆண்டுகளாகவே பிடிப்படாமல் டிமிக்கி கொடுத்து வந்த அந்த லேடி டான் வடகிழக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
பிரபல சர்வதேச கடத்தல் கும்பல் தலைவனான ஹாசிம் பாபாவின் மனைவியான சோயா கான்தான் இந்தப் பெண் தாதா. 33 வயதான சோயா, நீண்ட காலமாக சட்ட அமலாக்கத்தின் கண்காணிப்பில் இருந்து வந்தார். தன்னுடைய கணவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பிறகு கணவரின் கடத்தல் சாம்ராஜ்யத்தை இவர்தான் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
இதையும் படிங்க: சாமியார் தோற்றத்தில் பவன் கல்யாண்.. இமய மலைக்கு போறீங்களா?.. பிரதமர் மோடி தமாஷ்..!
ஆனால் இவருடைய பாணி சற்று வித்தியாசமாக இருந்தது. தனக்கும் சட்டவிரோத கடத்தல் தொழிலுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத வகையில், எந்த ஆதாரத்தையும் கண்டு பிடிக்க முடியாத வகையில் மிகவும் சாதுரியமாக நடந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டாலும் போலீசார் உறுதியான ஆதாரங்களுடன் உருப்படியான ஒரு வழக்கை அவர் மீது போட முடியவில்லை.
3-வது காதல் மனைவி
ஹாசிம் பாபா மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் தொடங்கி ஆயுத கடத்தல் வரை டஜன் கணக்கான குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. பெண் தாதா சோயா கான் பாபாவின் மூன்றாவது மனைவி ஆவார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு காசிம் பாபாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சோயா மற்றொருவரை மணந்திருந்தார். அவரை விவாகரத்து செய்த பின் பாபாவுடன் இணைந்தார். அவர்கள் இருவரும் வடகிழக்கு டெல்லியில் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்ததால் அவர்களுடைய காதல் கைகூடியது.
ஒரு வழக்கில் சிக்கிய பாபா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, கடத்தல் கும்பலை வழிநடத்தும் தலைமை பொறுப்பை சோயா ஏற்றுக்கொண்டார். தற்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பாபாவின் கும்பலில் அவருடைய சகோதரி ஹசீனா பார்க்கர் ர என்பவருக்கும் தொடர்பு இருந்தது.. அவர் ஒரு காலத்தில் அவருடைய கடத்தல் தொழிலை கட்டுப்படுத்திய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சகோதரி என்றும் தெரியவந்துள்ளது.
மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தை நிர்வகிப்பதில் சோயா தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான கும்பல் தலைவனை போல் அல்லாமல் சோயா தனக்கென்று ஒரு குறிப்பிட்ட உயர் மட்டபிம்பத்தை தக்க வைத்துக் கொண்டார். செல்வந்தர்கள் பங்கேற்கும் ஆடம்பர விருந்துகளில் பங்கேற்றார். விலை உயர்ந்த ஆடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சமூக ஊடகங்களில் அவர் இருப்பதிலிருந்து அவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் இருந்தது தெளிவாகிறது.
சோயா தனது கணவரை திகார் சிறைக்கு சென்று அடிக்கடி சந்தித்து வந்தார். கணவர் பாபா, அவருக்கு ரகசிய குறியீட்டு மொழியில் பயிற்சி அளித்ததாகவும் கும்பலின் நிதி மற்றும் செயல்பாடுகளை எல்லாம் எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைக்கு வெளியே உள்ள அவருடைய கூட்டாளிகளுடனும் மற்ற குற்றவாளிகளுடனும் அவர் நேரடி தொடர்பை பராமரித்து வந்தார். நீண்ட கால போராட்டத்திற்கு பின்பு டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இந்த முறை அவரை மடக்கி பிடிப்பதில் வெற்றி கண்டனர். வடக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் பதுங்கி இருந்தபோது சோயாவை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இருந்து விநியோகத்திற்காக வரவழைக்கப்பட்ட அதிக அளவு ஹெராயின் போதை பொருட்களுடன் அவர் கையும் களவுமாக இந்த முறை பிடிபட்டு இருக்கிறார்.
நாதிர்ஷா கொலை வழக்கில் தொடர்புடைய துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு சோயா தங்கும் இடம் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தெற்கு டெல்லியின் ஆடம்பரமான கிரேட்டர் கைலாஷ் -1 பகுதியில் ஜிம் உரிமையாளரான ஷா என்பவர் செப்டம்பர் 2024 சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் சிறப்பு பிரிவின் லோதி காலனி அலுவலகத்தில் சோயாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சோயாவை பொறுத்தவரை குற்றம் என்பதை ஒரு குடும்ப நிறுவனம் போல் நடத்தி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் பாலியல் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக கூறி சோயாவின் தாயார் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்திருக்கிறார். அவருடைய தந்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அமைப்புடன் தொடர்புடையவர்.
சோயா தனியாக வடகிழக்கு டெல்லியின் பல்வேறு இடங்களில் தங்கி இருந்து, குறிப்பாக உஸ்மான்பூரில் இருந்து செயல்பட்டார். எப்போதும் நான்கு அல்லது ஐந்து ஆயுதம் தாங்கிய உதவியாளர்கள் அவருக்கு காவல் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் அவருடைய கணவரின் விசுவாசிகள்.
வடகிழக்கு டெல்லி பகுதி நீண்ட காலமாக சேனு கும்பல், காசிம் பாபா கும்பல் மற்றும் நசீர் பெகல்வான் கும்பல் உள்ளிட்ட குற்ற கும்பல்களுடன் தொடர்புடையது. இந்த குழுக்கள் ஆரம்பத்தில் போதை பொருள் கடத்தலில் கவனம் செலுத்தி இருந்தாலும் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களின் மோதல்கள் தொடர்ச்சியான வன்முறை மற்றும் கொலைகளில் முடிந்தன.
சல்மான் கான் வீட்டு முன்பு நடந்த துப்பாக்கி சூடு
மிரட்டி பணம் பறிப்பதில் பெருந்தொகை குவித்த அந்த கும்பல், வருவாயில் பெரும்பகுதியை சோயாவுக்கு கொட்டி கொடுத்தனர். கடந்த ஆண்டு நாதிர் ஷா கொலை வழக்கில் பாபாவின் பெயர் வெளியே வந்தது. அவருடைய கொலையில் தனது பங்கை அவர் ஒப்புக்கொண்டதாகவும் இசைக்கலைஞர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய லாரன்ஸ் விஷ்ணோய் கோச்சியுடன் இருந்த தொடர்பும் தெரியவந்தது.
காவல்துறையின் தகவலின் படி 2021 ஆம் ஆண்டு பாபா சிறையில் அடைக்கப்பட்டபோது விஷ்ணோய்க்கும் பாவாவுக்கும் இடையே உறவுகள் வளர்ந்தன. அவர்கள் இருவரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தாலும் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பை பேணி, சிறை கம்பிகளுக்கு பின்னால் இருந்து தங்கள் சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: டெல்லியில் பதவியேற்ற பாஜக அரசு..! யார் யாருக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கீடு..?