ஆந்திராவில் பக்தர்களை தாக்கிய யானை கூட்டம்.. உடல் நசுங்கி பலியான பக்தர்கள்.. நிவாரணம் அறிவித்தார் பவன் கல்யாண்..
ஆந்திராவில் சிவராத்திரி விழாவுக்கு வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர்களை யானைகள் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஒபுலவாரிபள்ளே மண்டலத்தில் உள்ள குண்டலகோனாவில் பிரசித்தி பெற்ற தலகோனா கோவில் உள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 30 பேர் கொண்ட குழுவினர் இன்று குண்டலகோனா புறப்பட்டு சென்றுள்ளனர்.
குண்டலக்கோனாவில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு நடத்திய அந்த குழுவினர், அதன்பின் சேஷாசலம் வனப்பகுதி வழியாக நடந்து சென்று தலகோனாவில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் பக்தர்கள் குழு தலகோனா அருகே செல்லும் போது, தீடீரென அப்பகுதிக்குள் வந்த யானைகள் குழு பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பக்தர்கள் யானைகளை பார்த்ததும் பயத்தில் அலறி அடித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். சில பக்தர்கள் கூச்சலிட்டு யானைகளை பயமுறுத்த முயன்றுள்ளனர். இதனால் யானைகள் ஆவேசமடைந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பக்தர்களை சுற்றி வளைத்து தாக்கி யானைகள் மிதித்துள்ளன.
இதில் இதில் தினேஷ், மன்னம்மா, திருப்பதி சங்கல் ராயுடு ஆகிய மூன்று பக்தர்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் இருந்த தப்பிய பக்தர்கள் சிலர் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அப்பகுதிக்கு போலீசார் விரைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர் பலத்த காயமடைந்த பக்தர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த பக்தர்களின் நிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அப்போலோவில் அட்மிட்..! ஜனசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டத்தில் பக்தர்கள் மீது யானை தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை முதல்வரும் வனத்துறை அமைச்சருமான பவன் கல்யாண் இழப்பீடு அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சமும் நிவாரண நிதியாக துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
வனப்பகுதியில் உணவு பற்றாக்குறையால், காட்டு விலங்குகள் சில காலமாக அடிக்கடி மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்து மக்களைத் தாக்கி வருகின்றன. சிறுத்தைகள் மற்றும் யானைகளின் தாக்குதல்களில் பலர் உயிரிழந்தும் பலர் காயமடைந்தனர். எனவே காட்டு விலங்குகளைக் கண்டால், அவற்றின் அருகே செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜி.பி.எஸ் தொற்றால் பெண் உயிரிழப்பு - ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு