×
 

விளம்பரத்திலேயே ஆட்சி நடத்துகிறது திமுக.. ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு..!

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களான, மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை புதிதாகக் கட்டுதல், நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகப்படுத்துவதும், அதற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரை உடனுக்குடன் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமை என்று கூறியுள்ளார். 

அதிமுக ஆட்சி காலத்தில் இவையெல்லாம் முறையாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனெவே மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறதுm, இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நூறு சதவிகிதம் காலியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன., மருத்துவமனைகளிலேயே பணியாளர்கள் இல்லாத நிலையில், இல்லம் தேடி மருத்துவம் என்று தி.மு.க. அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு வருவது கேலிக்கூத்தாக உள்ளது என்று விமர்சித்தார். 

இதையும் படிங்க: நத்தை வேகத்தில் நகரும் தேனி - மதுரை நெடுஞ்சாலை பணி... தமிழக அரசிடம் சலித்துக்கொண்ட ஓபிஎஸ்... அமைச்சர் சொன்ன அதிரடி பதில்

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில், துணை சுகாதார நிலைய அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் நூறு விழுக்காடு காலியாக உள்ளதாகவும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2023-ல் வெளியிடப்பட்டதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இதுவரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

நூறு விழுக்காடு பணியிடங்கள் காலியாகும் அளவுக்கு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது தி.மு.க. அரசு என்றும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால், அறிவிப்பில் உள்ள குறைகளை நீக்கி, நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பி இருக்கலாம், தி.மு.க.விற்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டினார். தி.மு.க. அரசின் நோக்கமே காலிப் பணியிடங்களை நிரப்பாமல், திட்டங்களை அறிவித்து விளம்பரத்திலேயே ஆட்சியை நடத்திவிடலாம் என்பதுதான். ஆனால், பொதுமக்கள் கள யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எப்போதும் எக்காலத்திலும் ஏமாற்ற முடியாது என்ற ஆப்ரகாம் லிங்கனின் வரிகளை நினைவுபடுத்தி, காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் OPS, சசிகலா? எடப்பாடியின் அடுத்த நகர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share