பதவியில் உட்கார வைத்தே பல்லைப் பிடுங்கி விட்டோம்... ஆளுநரின் பதவி நீக்கம்... கொக்கரிக்கும் திமுக..!
கொடியேற்றும் தகுதியைப் பறித்தார் அன்றைய முதல்வர் கலைஞர். கையெழுத்துப் போடும் தகுதியைப் பறித்தார் இன்றைய முதல்வர்.
''தமிழ்நாடு ஆளுநர் ரவி, நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் சட்டம் ஆவதாக தமிழ்நாடு அரசின், அரசிதழில் கம்பீரமாக அறிவிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய மாபெரும் தீர்ப்பின் அடிப்படையில் இது நடந்துள்ளது'' எனக் கொக்கரிக்கிறது திமுக அரசு.
இதுகுறித்து முரசொலி நாளிதழில், 'ஆளுநர் இல்லாமலே' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், ''தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் 10 மசோதாக்கள் நிறைவேறியது என்ற மகத்தான சாதனையைச் செய்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கி இருந்தது.
“அரசமைப்புச் சட்டம் 142 ஆவது பிரிவின்படி உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் தரப்பட்டவையாக நாங்கள் அறிவிக்கிறோம். நீண்ட காலமாக மசோதாவை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக நேர்மையற்ற செயல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அஞ்சும் திமுக..! வேட்டையாடத் துடிக்கும் பாஜக… அமித் ஷாவின் அதிர வைக்கும் அரசியல் கணக்கு..!
இதுபோன்று பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது. அன்றைய தினம், குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். எனவே, மசோதாக்கள் மறுபரிசீலனைக்கு எப்போது தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன”என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி.பார்த்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் 10 மசோதாக்களும் அரசிதழிலில்வெளியாகி இருக்கின்றன. மசோதாக்களை ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைத்த 2023 நவம்பர் 13- ஆம் தேதியில் ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற சட்டம் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. இனிமேல் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு முதலமைச்சரின் வசமாகி உள்ளது.
தன்னை ஏதோ இந்த நாட்டின் வேந்தரைப் போல நினைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். அதற்கு உச்ச நீதிமன்றம் தடுப்பணை போட்டுள்ளது. பத்து மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் எப்படி ஒப்புதல் வழங்கலாம் என்று சில அதிமேதாவிகள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ‘உன் மூக்கைத் தொடு’ என்றால், ஓடிப் போய் ஆளுநரின் மூக்கைத் தொடும் ரகங்கள் இவை.
உச்ச நீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்துள்ளதே தவிர தன்னிச்சையாக அல்ல. பேரறிவாளன் விடுதலை விவகாரத்திலும் அரசமைப்பு விதி 142 தான் பயன்படுத்தியது உச்சநீதிமன்றம். மாநில அரசின் 161 ஆவது பிரிவின் உரிமையைக் காக்க நாங்கள் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் பேரறிவாளன் வழக்கில் நீதிபதிகளின் இறுதி முடிவு ஆகும்.
“அரசியல் சாசனம் பிரிவு 142 இன் படி முழுமையான நீதியை வழங்கு வதற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும் அல்லது உத்தரவையும் உச்சநீதிமன்றம் வழங்கலாம்” என்று உச்ச நீதிமன்றத்தின் அந்த அமர்வு சொன்னது. அதைத்தான் இந்த அமர்வும் சொல்லி இருக்கிறது. சட்டப்படி யார் நடக்க மாட்டார்களோ, அவர்கள் விஷயத்தில் சட்டப்படி உச்ச நீதிமன்றம் நடக்கும் என்பதை உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
415 பக்கங்கள் கொண்ட, பர்த்திவாலா, - மகாதேவன் அமர்வு தனது தீர்ப்பில், 10 சட்ட மசோதாக்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தது ஏன் என்பதை உச்ச நீதிமன்றம் விளக்கியிருக்கிறது. “அரசமைப்புச் சட்ட அதிகார அமைப்புகள் என்பவை அரசமைப்புச் சட்டத்தால் படைக்கப்பட்டவை. அதனால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. எந்தவொரு அதிகாரமும், அதன் அதிகாரங்களைப் பயன்படுத்து வதிலோ அல்லது துல்லியமாகச் சொன்னால், அதன் கடமைகளை நிறை வேற்றுவதிலோ, அரசமைப்புச் சட்டக் கட்டுப்பாட்டை மீற முயற்சிக்கக்கூடாது. ஆளுநர் அலுவலகமும் இந்தக் கட்டளைக்கு விதிவிலக்கல்ல.
அரசமைப்புச் சட்ட வரம்புகளுக்கு அப்பால் செல்ல எந்தவொரு அதிகார அமைப்பும் முயற்சிக்கும் போதெல்லாம், நீதித்துறையானது சீராய்வு அதிகாரத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அரசமைப்புச் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அதிகாரத்தை மீண்டும் கொண்டு வரவும், அரசமைப்புச் சட்டக் காவலராகச் செயல்படவும் இந்த நீதிமன்றத்திற்கு பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உள்ள எங்கள் அதிகாரத்தை நாங்கள் சாதாரணமாகவோ அதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்காமலோ பயன்படுத்தவில்லை. முழுமையான நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான்.”என்றும் நீதிபதிகள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே நீதியை நிலைநாட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். அதன்படி சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களும் நிறைவேறிவிட்டன. இதில் என்ன சிறப்பு என்றால் ,‘ஆளுநரின் கையெழுத்து இல்லாமல்’. அதுதான் சிறப்பு.
கொடியேற்றும் தகுதியைப் பறித்தார் அன்றைய முதல்வர் கலைஞர். கையெழுத்துப் போடும் தகுதியைப் பறித்தார் இன்றைய முதல்வர். ஆளுநர்களை அவர்கள் பதவியில் உட்கார வைத்துக் கொண்டே ‘தகுதி நீக்கம்’ செய்வது என்பது இதுதான்'' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்!