என்கிட்டயே காசு கேட்கிறியா.. பெண் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர்..!
கடலூர் அருகே பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த பெண் ஊழியர் ஒருவரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த பெண் ஒருவர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பண்ருட்டி விழமங்கலம் பகுதியை சேர்ந்த சீனு என்பவர் அந்த பங்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுகொண்டு காசை பின்னர் தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால், சீனு பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுதடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் அதே பெட்ரோல் பங்கிற்கு சென்ற சீனு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர் ஏற்கனவே பெட்ரோல் போட்டுச் சென்ற நூறு ரூபாய் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். திமுக பிரமுகரான என்னிடமே பணம் கேட்கிறாயா என வாக்குவாதம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் சீனு, பெண் ஊழியர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி சட்டையை கிழித்து கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையும் படிங்க: கத்தியை காட்டி மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. இருவர் கைது
இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் காயமடைந்த பெண் ஊழியரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெண் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக பிரமுகர் சீனு பெண் ஊழியரை தாக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா..? - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி