திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு கத்திக்குத்து.. சொத்து பிரச்சனையால் வெறிச்செயல்.. 17 வயது சிறுவன் கைது..!
ஆம்பூர் அருகே சொத்து பிரச்னை காரணமாக திமுக ஊராட்சி மன்ற தலைவியை 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா. திமுக ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவரது கணவர் கோவிந்தராஜ். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஷோபனா தனது இரண்டு குழந்தைகளுடம் தனியே வசித்து வருகிறார். ஊராட்சி நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் சோபனாவுக்கும், அவரது கணவரான கோவிந்தராஜின் அண்ணன் பாண்டியன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு தகராறு ஏற்பட்டு பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் சோபனாவை தாக்கி உள்ளனர். இது குறித்து ஷோபனா உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் குழந்தைகளுடன் ஷோபனா தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது கணவரின் அண்ணனான பாண்டியனின் 17 வயது மகன், திடீரென சோபனாவின் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்துள்ளான். இதனால் ஷோபனாவுக்கும், சிறுவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், கண்ணிமைக்கும் நேரத்தில் ஷோபனாவின் கை, முதுகு, மார்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுவன் குத்தி உள்ளான்.
இதையும் படிங்க: ‘மோசமான நிர்வாகத்தை மறைக்க முடியாதுங்க’... மு.க ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!
இதில் பலத்த காயமடைந்த ஷோபனா, ரத்த வெள்ளத்தில் சரிந்ததும் கொலை செய்ய முயற்சி செய்த சிறுவன் அப்படியே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளான். ரத்த வெள்ளத்தில் மிதந்த சோபனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர். உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உயிருக்கு ஆபத்தான முறையில் இருந்து அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற உமராபாத் காவல்துறையினர் தனது சொந்த சித்தியை கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பியோடிய சிறுவனை தேடினர். தனது வீட்டின் அருகே பதுங்கி இருந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே சொத்து பிரச்னை தொடர்பாக தமக்கு கொலை மிரட்டல் வருவதாக உமாராபாத் போலீசாரிடம் ஷோபானா புகார் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. போலீசார் முறைப்படி பாதுகாப்பு வழங்கி இருந்தால் தற்போது இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சொத்து பிரச்சனை காரணமாக ஊராட்சி மன்ற தலைவியை தனது சொந்த சித்தி என்றும் பாராமல் வீடு புகுந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியதில் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கலெக்டர், எஸ்.பி.யை மிரட்டுவது தான் திராவிட மாடலா? முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி..!