×
 

பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு துரோகம்.. அதிமுகவை ரவுண்டு கட்டிய கனிமொழி.!

பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக தமிழக மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம் என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

சென்னை வந்திருந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, "பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை தமிழகத்தில் எதிர்கொள்ளும்." என்று அறிவித்தார்.



இக்கூட்டணி அமைந்தது பற்றி திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யு.மான கனிமொழியிடம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “தமிழக மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.



பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமித் ஷாவுடன் ஒரே மேடையில் மவுனமாக அமர்ந்து, பாஜக - அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை இன்று பார்க்க முடிந்தது. அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது.

இதையும் படிங்க: திமுகவை வேரோடு அகற்றுவோம்.. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பிறகு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு.!



பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழக முதல்வர் கூறி வந்தார். இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது. மக்களை வெகுநாள் ஏமாற்ற முடியாமல், கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்,” என்று கனிமொழி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அமித்ஷா... மைக்கை பிடிங்கி பேசிய அண்ணாமலை... என்ன சொன்னார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share