மொழிப்போர் தியாகிகளுக்கு உண்மையான மரியாதை செலுத்துகிறோமா? - மருத்துவர் ராமதாஸ் கேள்வி
1938 மற்றும் 1965-ம் ஆண்டுகளில் தமிழ்மொழி காக்க நடைபெற்ற போராட்டங்களில் தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எந்த நோக்கத்திற்காக மொழிப்போர் தியாகிகள் போராடினார்களே அதற்கு எதிர் திசையில் ஆட்சியாளர்கள் பயணிப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் என்று குற்றஞ்சாட்டினார். அன்னைத் தமிழை காப்பதை விடுத்து அதனை அழிப்பதற்கான வேலைகளைத் தான் தமிழ்நாட்டை ஆள்பவர்கள் செய்து வருவதாக மருத்துவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் தாய்மொழியைப் படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்றுவது கடினமல்ல. தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தினாலே போதுமானது. ஆனால், அதைக் கூட செய்ய விரும்பாதவர்கள் தான் அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: அநீதியை எதிர்த்தால் இதுதான் கதியா? - பெட்ரோல் குண்டு வீசி உயிருடன் எரிக்கப்பட்ட இளைஞர் மரணம் - ராமதாஸ் ஆவேசம்!
தமிழ்நாட்டில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த வழக்கை தூசி தட்டி எடுத்து நடத்த இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.அதேபோன்று தமிழ் பயிற்று மொழி என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் 25 ஆண்டுகளை உள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற உத்தரவும் வெறும் ஏட்டில் மட்டும் தான் கடைபிடிக்கப்படுகிறது, கடைகளின் பலகைகளில் இல்லை என்று மருத்துவர் ராமதாஸ் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தில் அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது மட்டுமல்ல மேற்சொன்ன விவகாரங்களில் உறுதியான நிலைப்பாடு எடுப்பது மட்டுமே அவர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் அந்த அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தரம் உயர்த்தப்பட்டும் "நோ யூஸ்"..அரசு மருத்துவமனையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்