சாதிய அடையாளங்களோடு மாணவர்களை அனுமதிக்க கூடாது.. பள்ளி கல்வித்துறை உத்தரவு..!
பள்ளி வளாகத்திற்குள் சாதிய அடையாளங்களோடு மாணவர்களை அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வளாகத்துக்குள் சாதிய அடையாளங்களோடு மாணவர்கள் வருவதை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு மாணவர்கள் சாதிய அடையாளத்தைக் காண்பித்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பன் புகைப்படம் அச்சிட்ட டீ-ஷர்ட் அணிந்து வந்திருந்து அவரை புனிதப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: இரண்டே நாட்களில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு.. பள்ளிகளுக்குப் பறந்தது அதிரடி சுற்றறிக்கை...!
இது தவிர சோபன்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் சிலர் குறிப்பிட்ட கட்சியின் கொடியை தாங்கி வந்து நடனமாடினர். இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் சக மாணவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டதால், அதன்பின் பெற்றோர் அந்தப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு தயங்கினர்.
சில பெற்றோர் இந்த பள்ளியில் மாணவர்கள் குறிப்பிட்ட கட்சிக் கொடியுடன் வந்து நடனமாடியது குறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறையிடம் புகாரும் அளித்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் (சிஇஓ) மாநில கல்வித்துறை செயலர் கடந்த வாரம் ஓர் சுற்றறிக்கை அனுப்பினார். அதில் “மாணவர்கள் சாதிய அடையாளங்களோடு பள்ளிக்கு வருவது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் வருகிறது. சாதி அடையாளத்தோடு வரும் பாடல்களைப் பாடுதல், எந்த அடையாளத்தை தாங்கி வரும் ஆடைகளை அணிதல், சாதிய அடையாளத்தோடு வரும் ஆடைகள், கையில் வண்ணக் கயிறுகள், கழுத்தில் கையிறுகள் அணிந்து மாணவர்கள் வருவதை அனுமதிக்கக் கூடாது.
அவ்வாறு ஏதேனும் பள்ளிகள் மீது புகார்கள் இனிமேல் வந்தால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வித்திறன், கலாச்சாரதிறன்களை வளர்க்கும் விதத்தில் ஆண்டு விழா நடத்த ரூ.15 கோடியை தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கியிருக்கிறது.
ஆதலால், ஆண்டு விழாவில் மாணவர்கள் குறிப்பிட்ட சாதிய அடையாளத்தோடு கையில் ரிப்பன்கள், கயிறுகள், தலையில் துண்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து வந்தால் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.
தமிழகத்தின் 5வது போலீஸ் ஆணையத்தின் அறிக்கையின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாதிய பாகுபாடு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரித்துள்ளது. ஆதலால், மாணவர்கள் சாதிய அடைாயளத்தோடு வண்ணங்களில் ரிப்பன் அணிதல், ஆடைகள் அணிதல், கையில் பட்டைகள், கயிறுகள் அணிதல் தடை செய்யப்பட்டுள்ளது. சாதி பாகுபாடு காணப்படும் பள்ளிகளில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிகம் இருக்கக்கூடாது. சாதி பாகுபாட்டை ஊக்குவித்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல் ஆணையம் பரிந்துரைத்தது.
மாணவர்களை சரியான திசையில் வழிநடத்துவதில் தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கியமான, ஆர்த்மாத்தமான பொறுப்பு இருக்கிறது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் சிசிடிவி வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்படலாம் அதன் மூலம் மற்ற மாணவர்களை கொடுமைப்படுத்தும் மாணவர்களை அடையாளம் காண முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுற்றறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி கல்வித்துறை கொடுத்த ஷாக்... கவலையில் பள்ளி மாணவர்கள்!!