10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி எப்போது? வெளியானது முக்கிய தகவல்!!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதுவதற்கு 5 ஆயிரத்து 606 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் தேர்வுப் பணிகளை கண்காணிப்பதற்கு 43 ஆயிரத்து 446 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 4 ஆயிரத்து 470 பறக்கும் படை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர். தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மார்ச் 26ஆம் தேதி முதல் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: தேர்வன்று திடீரென உயிரிழந்த தாய்.. மனதை ரணமாக்கிய மாணவனின் செயல்..!
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதை அடுத்து விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களாக நியமிக்கப்படும் அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்ய உள்ளனர்.
அதன் பின்னர் மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, வரும் மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றது போன்ற தவறுகள் ஏற்படாத வகையில் திருத்தும் பணிகள் நடைபெற வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 19 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி கல்வித்துறை கொடுத்த ஷாக்... கவலையில் பள்ளி மாணவர்கள்!!