அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடுகளில் ED RAID..!
கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அமலாக்கத் துறையையும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. கடந்த 3 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு வழக்கில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் சோதனையோ, விசாரணையோ நடத்தியபடியே தான் உள்ளனர். அந்த வகையில், இன்று கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரரும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பருமான சங்கர் ஆனந்த் என்பவர் வீட்டில் கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதே சங்கர் ஆனந்த் வீட்டில், அமலாக்கத்துறை சோதனை நடத்தி எதுவும் சிக்கவில்லை என்று சென்றிருந்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் புதிய திருப்பம்... கறார் காட்டிய நீதிமன்றம்.. காவல்துறைக்கு உத்தரவு..!
இங்கு மட்டுமல்லாது ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி என்பவரது வீட்டிலும், கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னையிலும் ஒருசில இடங்களில் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு ஆட்களை எடுத்ததாகவும் இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாகவும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜுன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மொத்தம் 471 நாட்கள் செந்தில்பாலாஜி சிறையில் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் ஜாமினில் வெளிவந்தார். கடந்த இடைப்பட்ட காலத்தில் அவரது அமைச்சர் பதவி பறிபோனது. ஆனாலும் சிறையில் இருந்து வந்தபிறகு மீண்டும் அமைச்சராக அவர் செயலாற்றி வருகிறார்.
செந்தில்பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே அவ்வப்போது செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் என்று கருதும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவது வழக்கம். அத்தகைய ஒரு சோதனைதான் இது என்று அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோது அவருக்கு 50 முறைக்கு மேல் ஜாமின் மறுக்கப்பட்டது. 2 வருடங்களாக சிறையில் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வளவு காலமாக வெளிவராத உண்மைகளா இப்போதைய விசாரணையில் கிடைத்து விடப்போகிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: கடும் வறுமை... கரண்ட் பில் கட்ட கூட காசு இல்லை...! உருக்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்..!