எடப்பாடியாரின் மனமாற்றம்... உள் கூட்டணி அரசியலில் டி.டி.வி. - ஓ.பி.எஸ்..! அதிமுகவில் புதிய வியூகம்..!
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விட்ட 3 லட்சம் வாக்குகளை விட அதிகப்படியாக தென் மாவட்டங்களிலும், டெல்டாவிலும் பெறலாம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி பலத்துடன் அசுர வேகத்தில் களத்தில் இறங்கியிருக்கிறது தி.மு.க. மற்றொரு பக்கம் த.வெ.க.வும் அதிரடியாக நிர்வாகிகளை நியமித்தும், மாற்றுக் கட்சியினரை இணைத்தும் களத்தில் இறங்க ஆயத்தமாகிவருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வியூகத்தை வகுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஜெயலலிதா, சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளி ஒருவர் ''ஜெயலலிதா மரணத்துக்கு பின் அக்கட்சியில் சக்தி வாய்ந்தவர்களாக பார்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் பலம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு குறையத் தொடங்கியது. கட்சித் தலைமை ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்தாலும் மாநிலத்தின் உட்சபட்ச அதிகாரமாக விளங்கிய எடப்பாடி பழனிசாமி, அனைவரையும் விட அதிக செல்வாக்கை பெற்றார்.
இதன் காரணமாகவே கட்சித் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் அணி திரண்டனர். முதலமைச்சராக இருந்தபோதே மாவட்டச் செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் பெரும்பாலானோரை தன்வசம் அவர் ஈர்த்துக்கொண்டார். சசிகலா, தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏக்கள், ஆதரவாளர்களும் காலப்போக்கில் எடப்பாடி அணியில் சாய்ந்தனர். தர்ம யுத்தத்தின்போது ஓபிஎஸ் உடன் இருந்தவர்கள் தற்போது எடப்பாடியுடன் இருக்கிறார்கள். இப்படி அசைக்க முடியாத சக்தியாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி உருவெடுத்தார்.
அதே சமயம் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.கவை பாஜக மேலிடம் 'வெட்டி ஒட்டியது! அதன் பிறகு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சுதாரித்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், 'இனி என்றைக்குமே பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது' என எடப்பாடி பழனிசாமி தரப்பு அடித்துச் சொல்லி வருகிறது. ஏனென்றால், இன்றைக்கு மகாராஷ்டிராவில் பாஜக எப்படி கால்பதித்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: 2026ல் அதிமுகவுக்கு மூடு விழா...! தமிழகத்தில் மதக்கலவரம்...! திகில் கிளப்பும் டிடிவி தினகரன்!
தமிழகத்தைப் பொறுத்தளவில் திமுக- அதிமுக தான் என்றிருந்த நிலையில், கடந்த வருடம் கட்சி ஆரம்பித்தார் நடிகர் விஜய்! விக்கிரவாண்டியில் நடந்த முதல் அரசியல் மாநாட்டில், இரண்டு திராவிட கட்சிகளுமே வியக்கும் அளவிற்கு லட்சக் கணக்கில் இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டனர். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் இறங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இளைஞர்களை கவரும் வகையில் சில திட்டங்களை தீட்டிவருகிறார். சமீபத்தில் கூட நாம் தமிழர்கட்சியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இப்படி விஜய்யின் அரசியல் வருகை ஆளும் கட்சியைத் தாண்டி, எதிர்க்கட்சியையும் அசைத்துப் பார்த்தது. அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், 'முதல்வர் நான்தான்' என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார். எனவே, ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதை விஜய்யும், எடப்பாடி பழனிசாமியும் உணர்ந்த பிறகு கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதை முடிவு செய்துவிட்டனர். ஆனாலும், விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, 'அதிமுக. தவெக கூட்டணி அமைந்தால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புண்டு' என இரு தரப்பிடமும் பேசியிருக்கிறார், பேசியும்வருகிறார். இவரது முயற்சிக்கு காலம்தான் பதில் சொல்லும்!
சமீபத்தில் த.வெ.க.வில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் நடந்தது. பெறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, திராவிடக் கட்சிகளுக்கு இணையாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தன தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்!
இந்த நிலையில்தான் அதிமுக வலுவாக இருந்தால்தான் கூட்டணிக்கு மற்ற கட்சிகள் வரும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எடப்பாடிக்கு நெருக்கமான தொழில் அதிபர்களும் அடிக்கடி சொல்லிவந்தனர். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சமீப நாட்களாக மனம் மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது அ.தி.மு.க. அதாவது, கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் வலுவான எதிர்க்கட்சியாக அதி.மு.க. இடம்பெற்றது. இதனை எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி கூறிவந்தார். இந்த நிலையில்தான், அந்த 3
லட்சம் வாக்குகளை சரிகட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார். தவிர, அ.தி.மு.க.வில் வாக்கு சதவீதம் குறைந்ததையும் கவணிக்காமல் இல்லை. அதற்கும் தீர்வை காணப்போகிறார்.
2026ல் ஆட்சியைப் பிடிக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார்' என்று சொன்னதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த நிலையில்தான் டி.டி.வி.தினகரனையும், ஓ.பி.எஸ்.ஸையும் அ.தி.மு.க.வில் இணைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களால் டெல்டாவிலும், தென்மாவட்டங்களிலும் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு வரக்கூடாது என முடிவு செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, ஓ.பி.எஸ். தரப்பிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 சீட்டும், டி.டி.வி. தரப்பிற்கு 10 சீட்டும் கொடுக்க முடிவு செய்துவிட்டாராம். இதனை இரண்டு தரப்புமே ஏற்றுக் கொண்டதாகவும் தகவல். இவர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் ஆமோதித்து இருக்கிறார்களாம்.
கடந்த சில நாட்களாக 'பா.ஜ.க. கூட்டணியில் அதி.மு.க. இணையவேண்டும்' என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி வருகிறார். அப்படியிருக்கும் போது எப்படி கூட்டணிக்கு ஒத்துக்கொள்வார் என கேட்கலாம்? இன்றுவரை பா.ஜ.க.வை டி.டி.வி.தினகரன் முழுமையாக நம்பவில்லை என்பதோடு, அவருக்கு கட்சி நடத்தவும் விருப்பமில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதனால்தான், அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க.வை சேர்க்க முயற்சிக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பும் கண்ணசைத்திருக்கிறதாம்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விட்ட 3 லட்சம் வாக்குகளை விட அதிகப்படியாக தென் மாவட்டங்களிலும், டெல்டாவிலும் பெறலாம். கொங்கு மண்டலத்திலும் அ.தி.மு.க.வின் செல்வாக்கை நிலை நிறுத்த எஸ்.பி.வேலுமணி தரப்பு வியூகம் வகுத்து வருகிறது.வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தவிர்த்து, இப்படியொரு உட்கட்சி கூட்டணியுடன் பிற கட்சிகளை இணைத்து வலுவாக போட்டியிடும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு இந்த வியூகம் 2026 ஆட்சியை அமைக்க கைகொடுக்குமா என்பதை பெறுத்திருந்து பார்க்கவேண்டும்.!
இதையும் படிங்க: பெரியார் பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கோங்க - சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை!