இந்திய ராணுவம் என்னை உளவுப் பார்த்தது.. முன்னாள் வீரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
இந்திய ராணுவம் என்னை உளவுப் பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஹவானா சின்ட்ரோம் என்ற நுண்ணலை கதிரியக்கத்தை தனக்கு எதிராக செலுத்தியுள்ளதாகக் கூறி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகளை உளவு பார்ப்பதற்காக கியூபா நாட்டால் பரப்பப்பட்ட ஒருவித நுண்ணலை கதிரியக்கம் ஹவானா சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த சிண்ட்ரோம் காரணமாக, உடலில் நுண்ணலை பரவி, தலைவலி, கண் பாதிப்பு, உடல் அரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவர்.
2018ம் ஆண்டு உலக நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சிண்ட்ரோமை தனக்கு செலுத்தி, வேவு பார்த்ததாக, இந்திய ராணுவ விண்வெளி முகமை மீது குற்றம் சாட்டி, முன்னாள் ராணுவ வீரர் பூபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு.. ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்..!
இதுசம்பந்தமாக அவர் தாக்கல் செய்த மனுவில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் உணவகம் நடத்தி வந்த நிலையில், ராணுவ விண்வெளி முகமை தனக்கு செலுத்திய இந்த ஹவானா சிண்ட்ரோம் காரணமாக ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால் உணவக தொழில் நஷ்டமடைந்ததாக கூறியுள்ளார்.
இதனால் தனக்கு 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஹவானா சிண்ட்ரோம் இந்தியாவில் பரவியுள்ளதா என்பது குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, தன்னை உளவு பார்ப்பதற்காக ஹவானா சிண்ட்ரோம் செலுத்தப்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு மனுதாரர் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சீமானின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள்..!