இறப்பிலும் இணைபிரியா நண்பர்கள்.. சோகத்தில் மூழ்கிய கல்லூரி நிர்வாகம்..
மயிலாடுதுறை அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் புத்தூரில் உள்ள பொன்மனச் செல்வர் புரட்சிக் கலைஞர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்பிஏ இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளனர்.
நெருங்கிய தோழர்களான இருவரும் கல்லூரிக்கு சேர்ந்து வருவதும் திரும்பிச் செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளனர்.
அப்போது எதிர் திசையில் மயிலாடுதுறையில் ஜல்லி இறக்கிவிட்டு புதுச்சேரி நோக்கிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதையும் படிங்க: டீக்கடைக்குள் புகுந்த இஸ்ரோ பேருந்து.. இருவர் பலி..
தொடர்ந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய புவனேஸ்சை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக லாரி டிரைவர் கந்தன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எமனாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்.. சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்கள்!