ஸ்பெஷல் அங்கீகாரம்..! கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு..!
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
புவிசார் குறியீடு ( ஜியோகிராப்பிக்கல் இண்டிகேஷன்) என்பது ஒரு பொருள் அல்லது சின்னம் அதன் இடத்தின் தனித்துவமான பண்புகள் மற்றும் தரத்தால் குறிக்கப்படுவது. புவிசார் குறியீடு என்பது பாரம்பரிய முறைகளின் படி தயாரிக்கப்படும் சிறப்பு பண்புகளை அடையாளம் காட்டும் நற்பெயர். புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகள், உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பொருளாதார செழிப்பை ஊக்குவிக்கிறது.
இந்த புவிசார் குறியீடு என்பது அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் வகைப்படுகிறது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் ஒரு பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
இதையும் படிங்க: ஸ்பெஷல் அங்கீகாரம்! மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு!
காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லி , மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம்,சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பம் தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சை பாணி ஓவியங்கள், பத்தமடை பாய், திருவண்ணாமலை ஆரணி பட்டு, பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, ஆத்தங்குடி டைல்ஸ், திண்டுக்கல் பூட்டு, ஆம்பூர் பிரியாணி, சிவகாசி பட்டாசு, மார்த்தாண்டம் தேன் என எண்ணற்ற பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
சமீபத்தில் மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. தற்போது, கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கும்பகோணம் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலை முக்கியமான இடத்தை பெறுகிறது. வெற்றிலை ஒரு சில மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் கும்பகோணம் வெற்றிலை என்பது தனி சிறப்பைப் பெற்று விளங்குகிறது. இது தனிச் சுவையும் மனமும் கொண்டதாக இருக்கிறது. தனிச்சிறப்பு கொண்ட கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
அதேபோல், தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்கமாலை உலகில் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாக விளங்குகிறது. இந்த மாலை வெள்ளை, சிவப்பு வண்ண அரளிப் பூக்கள், நொச்சி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மற்ற மாலைகள் போல் அல்லாமல் சம்பா வாழை நாரைக் கொண்டு மட்டும்தான் இந்த மாலையை கட்டுகின்றனர். கேரளத்தை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்திலிருந்தே இந்த மாலை கட்டப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த தோவாளை மாணிக்கமாலைக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: சுயநலனுக்காக மொழி பிரச்சனைய கிளப்புறாங்க.. ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் செய்த யோகி..!