சையப் அலிகானை கத்தியால் குத்தியது நான்தான்... குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமது இஸ்லாம்....
பிரபல பாலிவுட் நடிகர் சையப் அலிகான் கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மநபர் ஒருவரால் கத்திக்குத்துக்கு ஆளானார்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட வந்த அவரை சையப் அலிகான் தடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. இதில் படுகாயம் அடைந்த சையப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முதலில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். திட உணவுகளையும் அவர் எடுத்து வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவரை பிடிக்க மும்பை மாநகர குற்றப்பிரிவு போலீசாரும், பாந்த்ரா போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சையப் அலிகானின் குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா என்பவரின் புகைப்படத்தை முதலில் வெளியிட்டனர். சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அவர் மத்தியப்பிரதேச மாநிலம் விரைவு ரயிலில் பயணித்தபோது ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சையப் அலிகானின் வீட்டில் தச்சுவேலைக்காக வந்து சென்றவர் என்பதும், இந்த குற்றச்செயலுக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் தப்பவில்லை! பெரியதொகைக்கு ஆசைப்பட்டு ரூ.90 லட்சத்தை இழந்தார்
இந்நிலையில் குற்றவாளியை நேரில் பார்த்த சையப் அலிகான் மனைவி கரீனா கபூர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் எலியாமா பிலிப் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது மும்பை தானே பகுதியில் பதுங்கி இருந்த நபர் ஒருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது பெயர் முகமது ஷெரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்பதும் அவர் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது சட்டவிரோதமாக அவர் இந்தியாவிற்குள் ஊடுருவி கடந்த 6 மாதங்களாக மதுபானவிடுதி, கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றில் சிறிய வேலைகளை செய்து வந்ததும், தனது பெயரை பிஜோய் தாஸ் என மாற்றிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் முகமது இஸ்லாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று ஒப்புதல் வழங்கியது. இந்த விசாரணையில் சையப் அலிகான் வீட்டிற்குள் முகமது இஸ்லாம் நுழைய வேறு யாரேனும் உதவி செய்தார்களா? ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என அந்த நள்ளிரவில் கத்தியைக் காட்டி சையப் அலிகானை மிரட்டியது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சைபர் குற்றங்களை தடுக்கும் போலீஸ் புலிகள் ..முன்னால் டிஜிபி .!