புதிய பாய்ச்சலில் மேக் இன் இந்தியா... IIT மெட்ராஸ் - ISRO இணைந்து தயாரித்துள்ள செமி கண்டக்டர்கள்..
விண்வெளித்துறைக்கு தேவையான செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்து இஸ்ரோவும், சென்னை ஐஐடியும் இணைந்து சாதனை படைத்துள்ளன.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ஆதாரமாக விளங்கும் செமி கண்டக்டர்களை இந்தியா பெரும்பாலும் இறக்குமதி செய்தே வருகிறது. இந்நிலையில் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விண்வெளித்துறைக்கு தேவையான செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்து இஸ்ரோவும், சென்னை ஐஐடியும் இணைந்து சாதனை படைத்துள்ளன.
ஐஐடி மெட்ராஸ்- இஸ்ரோ இணைந்து ஆத்மநிர்பர் விண்வெளி திட்டத்தின் கீழ் சக்தி (Shakti) அடிப்படையிலான செமிகண்டக்டர் சிப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ இனர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டுடன் கூட்டு முயற்சியாக சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சிப், கர்நாடகாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல்- பொறியியல் துறையின் கீழ் சக்தி மைக்ரோபிராசசர் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிப்பயன்பாட்டு பிராசசர்களை வடிவமைப்பதற்கான சக்தி (Shakti) வகை அமைப்புகள், RISC-V அடிப்படையிலான ஓபன் சோர்ஸ் தொகுப்பு கட்டமைப்பைக் (ISA) கொண்டவை.
இதையும் படிங்க: 39 புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு...
இந்திய அரசின் மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ‘டிஜிட்டல் இந்தியா RISC-V’ முன்முயற்சியின் கீழ் ‘சக்தி’ திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. விண்வெளித் தொழில்நுட்பங்களில் ‘ஆத்மநிர்பர் பாரத்’ தொடர்பான பயணத்துடன் இணைந்து, அதன் பயன்பாடுகள், கட்டளை- கட்டுப்பாட்டு அமைப்புகள், பிற முக்கியமான செயல்பாடுகளுக்கு இஸ்ரோ பயன்படுத்தும் செமிகண்டக்டர்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இத்திட்டம் இருந்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ இனர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து பணியாற்றி உள்ளது. இஸ்ரோ விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் சென்சார்கள், உள்நினைவகங்கள் ‘சக்தி’ மையத்துடன் இணைக்கப்பட்டு, இந்த வடிவமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி உள்ளன. இது முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பு என்பதால், இந்த செமிகண்டக்டர்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தப் புதிய மைக்ரோ பிராசசரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில், “2018-ல் RIMO, 2020-ல் MOUSHIK க்குப் பிறகு, எஸ்சிஎல் சண்டிகரில் நாங்கள் தயாரித்து ஐஐடி மெட்ராஸில் வெற்றிகரமாக தொடங்கிய மூன்றாவது ‘சக்தி’ சிப் இதுவாகும். சிப் வடிவமைப்பு, சிப் உற்பத்தி, சிப் பேக்கேஜிங், மதர்போர்டு வடிவமைப்பு- உற்பத்தி, அசெம்பிளி, மென்பொருள், பூட் - அனைத்தும் இந்தியாவிற்குளேயே நடைபெற்றது, முழுமையான செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பு- நிபுணத்துவம் நம் நாட்டிற்குள்ளேயே இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துவம் வகையில் அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டு முயற்சியைப் பாராட்டிய இஸ்ரோவின் தலைவர் நாராயணன் கூறும்போது, “ஐஐடி மெட்ராஸின் சக்தி பிராசசரை அடிப்படையாகக் கொண்ட ஐஐஎஸ்யூவால் உருவாக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் கண்ட்ரோலரை இந்தியாவில் உள்ள வளங்களுடன் முழுமையாக வெற்றிகரமாக உருவாக்க முடிந்ததில் இஸ்ரோவில் பணியாற்றும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். செமிகண்டக்டர் வடிவமைப்பு- உற்பத்தியில் “மேக் இன் இந்தியா” முயற்சிகளில் உண்மையிலேயே இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: அதானிக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள்: ஊழல் வழக்கை கைவிடக் கோரி அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்