தமிழகத்தில் இ.கம்யூ. ஒரு நாள் ஆட்சி அமைக்கும்.. ஆசையை வெளிப்படுத்திய திமுக கூட்டணி கட்சி.!
தமிழகத்தை காட்டி கொடுத்து எட்டப்பனாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.
இரா. முத்தரசன் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து மிகவும் தவறானது. அதற்காக அவரை கட்சி பதவியில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நீக்கியுள்ளார். அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதை ஏற்க வேண்டும். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என காங்கிரஸ் தொண்டர் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக திமுக கூட்டணியில் எந்தச் சலசலப்பும் ஏற்படாது.
ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கத்தான் செய்யும். எங்கள் கட்சியும் தமிழகத்தில் ஒரு நாள் ஆட்சி அமைக்கும், அதற்காகத்தான் நாங்களும் கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஊழல் குற்றத்தால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா வளர்த்த அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் வைத்துக்கொண்டு ஊழலை பற்றி பேச மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அருகதை இல்லை. அதிமுக தொண்டர்கள் பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை.
தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை நயவஞ்சகமாக பாஜக அழித்துவிடும். பாஜக கூட்டணியில் அதிமுக தானாக சேர்ந்ததா? அல்லது நிர்பந்தத்தால் சேர்ந்ததா? எனத் தெரியவில்லை. தமிழக மக்கள் பிரச்சினையில் முதல்வர் பேசும்போது ஆதரவு அளித்த பழனிசாமி, இன்று தமிழகத்தை காட்டி கொடுத்து எட்டப்பனாக மாறிவிட்டார்." என்று முத்தரசன் கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்!
இதையும் படிங்க: 2026 தேர்தலில் முதலிடம் அதிமுக - பாஜக கூட்டணி.. இரண்டாமிடம் விஜய்.. தமிழிசை தாறுமாறு கணிப்பு.!!