இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம்... வியக்க வைக்கும் ஆச்சர்ய தகவல்கள் இதோ...!
நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலத்தினை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
நாளை பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ள பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னவென விரிவாக பார்கலாம்...
இந்தியாவிலேயே முதல் முறை:
இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்குப் பாலம் என பெருமை பெற்றுள்ள, புதிய ரயில் பாலம் மொத்தம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது. புதிய பாம்பன் பாலம் மண்டபம் மற்றும் பாம்பன் ரயில் நிலையங்களுக்கிடையே 2.08 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரட்டை இரயில் பாதை அமைக்கும் வகையில் அகலமான 99 தூண்கள் கடலில் நிறுவப்பட்டுள்ளன. அதன் மேல் ரயில் பாதை அமைப்பதற்காக102 இரும்பு கிர்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரதமர் வருகை எதிரொலி.. மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்லத் தடை.. ட்ரோன் பறக்கவிடவும் தடை..!
18.3 மீட்டர் நீளம் உள்ள 99 கிர்டர்கள், ஒரு 72.5 மீட்டர் நீளமுள்ள செங்குத்தாக திறக்கும் பால கிர்டர்கள், மேலே கீழே சென்று வரும் இந்த கிர்டரில் உள்ள ரயில் பாதை சரியாகப் பொருந்தும் படி இருபுறமும் 10.2 மீட்டர் நீளமுள்ள சிறிய கிர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூக்குப் பாலத்தின் சிறப்புகள்:
செங்குத்து தூக்குப் பாலம் 27 மீட்டர் உயரமும், 77 மீட்டர் நீளமும் 100 டன் எடை கொண்டது. இதில் 700 டன் எடை கொண்ட ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயக்கப்பட்டு 3 நிமிடத்திற்குள் செங்குத்து பாலத்தை மேல்நோக்கி தூக்கும், இரண்டு நிமிடத்திற்குள் இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கப்பல்கள் கடந்து செல்ல பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தூக்குப் பாலத்தை வடிவமைக்க விமானத் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தக்கூடிய அலுமினிய உலோகக் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் நடுப்பகுதி கிர்டர் 650 டன் எடை கொண்டது.
இதை கப்பல்கள் சென்று வர வசதியாக பாலத்தில் இருந்து செங்குத்தாக 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தலாம். இந்த 650 டன் தூக்கு பாலத்தை எளிதாக ஏற்றி, இறக்க கோபுரங்களின் இருபுறமும் 315 டன் எடை கொண்ட செவ்வக பளு உள்ளது. கிணற்றில் நீர் இறைப்பது போல மோட்டார் இயக்கப்பட்டவுடன் பாலம் மேலே செல்ல இருபுற பளுவும் கீழே வரும்.
அதேபோல பாலம் கீழே வரும் போது இவை மேலே செல்லும். பாலத்தை ஏற்றி, இறக்க நான்கு கோபுரங்களிலும் தலா ஆறு ராட்சத கம்பி வடங்கள் என 24 கம்பி வடங்கள் கோபுரங்கள் மேலே உள்ள அறைகளில் உருளையுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்:
செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகிலேயே இரண்டு மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய தூக்கு பாலத்திற்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வர்ணம் பூசப்பட்டு வந்த நிலையில், புதிய பாலம் கடற்காற்றால் துருப்பிடிக்காமல் 35 ஆண்டுகள் வரை காக்கும் வகையில் மூன்று அடுக்குகளாக நவீன வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன.
புதிய பாலத்தின் முழு நீளத்திற்கும் ஊழியர்கள் சென்று வர தனி பாதுகாப்பான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பழைய பாலத்தில் இல்லை. கடல் பகுதியில் தூக்கு பாலத்தை தாங்கி நிற்கும் இரு தூண்களின் மீது படகுகள் மோதாமல் இருக்கும் வகையில் நீண்ட கரை போன்ற அமைப்பு இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் 33 மீட்டர் ஆழத்திற்கு இரும்பு குழாய்கள் சொருகி அதற்குள் நவீன கான்கிரீட் கலவையை செலுத்தி வலுவான தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: டெல்லியில் செங்கோட்டையன் சந்திப்பு விவகாரம்.. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி..?