டாப் கியரில் 'குடும்பஸ்தன்' படம்... வசூல் நிலவரம் என்ன தெரியுமா.?
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.
‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனலைச் சேர்ந்த ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள படம், ‘குடும்பஸ்தன்’. எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார். வேலை பறிபோகும் நாயகன், குடும்பத்துக்காக கடன் வாங்கி குவிப்பது, அவரை எங்கு கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதை கலகலப்பாக பேசுகிறது இப்படம்.
இந்தப் படம் ஜன.24இல் வெளியானது. படம் வெளியானது முதலே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 'குடும்பஸ்தன்' படத்தின் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் ரூ.1 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.2.2 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.3.2 கோடியும், நான்காவது நாளில் ரூ.1 கோடியும் வசூல் செய்துள்ளது, 'குடும்பஸ்தன்'. ஐந்தாவது நாளான நேற்று ரூ.1 கோடியை எட்டும் நிலையில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் கடந்த 5 நாட்களில் இந்திய அளவில் மட்டும் இப்படம் ரூ.8 கோடியைக் கடந்துள்ளது.
இப்படம் ரூ.10 முதல் 12 கோடியில் உருவாக்கப்பட்டது. இந்த வாரம் சொல்லிக் கொள்ளும் வகையில் புதிய படங்கள் ரிலீஸாகவில்லை. எனவே, இன்னும் ஒரு வாரத்துக்குக் குறையாமல் 'குடும்பஸ்தன்' படம் தியேட்டரில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்படம் பட்ஜெட்டைத் தாண்டி லாபம் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன்... அட்வைஸ் தந்த ஜி.வி.பிரகாஷ்....