கும்பமேளாவும் அதன் பொருளாதார தாக்கமும்...
ரூ. 7,500 கோடி செலவில் இன்று துவங்கியுள்ள மகா கும்பமேளா..
சில வினாடிகள் கண்களை மூடி யோசித்துப் பாருங்கள். அடுத்த 45 நாட்கள், கங்கை ஆற்றங்கரையில் 4,000 ஏக்கர் பரப்பளவு, தோராயமாக 45 கோடி யாத்திரிகர்கள் - உலகின் பல பகுதியிலிருந்தும். இதன் விஸ்தீரனத்தையும், இது இதுஏற்படுத்த இருக்கும் பொருளாதார தாக்கத்தையும் உங்களால் யூகிக்க முடிந்ததா?
இதுதான் இன்று துவங்கியுள்ள மகா கும்பமேளா. இதை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்திரபிரதேச அரசு கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது, இதற்கு முன் 2019 இல் நடந்த கும்பமேளாவிற்கு செலவிடப்பட்ட தொகையைப் போல கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.
இதையும் படிங்க: ரூ.2 லட்சம் கோடி வருவாய்! மகா கும்ப மேளா மூலம் உ.பி. அரசுக்கு ‘ஜாக்பாட்’
பல உணவுக் கடைகளுடன், அடிப்படை முதல் ஆடம்பரம் வரை பல்வேறு தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. யாத்திரிகர் தங்குவதற்காக அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களும் தற்காலிக சொகுசு கூடாரங்கள் முதற்கொண்டு பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். உத்தரப்பிரதேச அரசு மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேலான சாதாரண மற்றும் மத்திய தர கூடாரங்களும், 2,200 சொகுசு கூடாரங்களும் நிறுவியுள்ளது. இவற்றின் வாடகை நாளொன்றுக்கு (இருவர் தங்க) சுமார் 15,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விற்று தீர்ந்து விட்டன என்று தெரிகிறது. இது தவிர ப்ரையாக்ராஜில் உள்ள அனேகமாக அனைத்து ஓட்டல் அறைகளும் அடுத்த 45 நாட்களுக்கு விற்று தீர்ந்து விட்டதாக தெரிகிறது.
இங்கு கடைகள் விரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒவ்வொரு கடைக்கு உண்டான இடமும் சுமார் ஒரு கோடி ரூபாயிலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக இதற்குப் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி, திரு விவேக் சதுர்வேதி கூறியிருக்கிறார்.
உதாரணத்திற்கு, ஆர் ஆர் ஹாஸ்பிடாலிட்டி என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர், திரு அஸ்வின் தக்கார் இது பற்றி கூறுகையில் அவர்கள் நிறுவனம் மட்டும் 13 கோடி ரூபாய் செலவழித்து 12 விற்பனைக்காக கடைகளை ஏலம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இடங்களில் பல பெரிய பிராண்டுகள் கொக்கோகோலா, டோமினோஸ் மற்றும் ஸ்டார்பக்ஸ் காபி போன்ற நிறுவனங்களும் போட்டி போடுவதாக தெரிவித்தார். மேலும் இவர்கள் சிறிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்காக ஒரு அம்யூஸ்மென்ட் பார்க் நிறுவுவதற்காக 13 கோடி ரூபாய் (இடத்திற்காக மட்டும்) வரை செலவு செய்ய தயாராக இருந்ததாகவும் அதற்கு உண்டான இடம் கிடைக்காததால் அதை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவர்களுடைய எதிர்பார்ப்பை உறுதி செய்யும் வகையில், கான்பெடரேஷன் ஆப் ஆல் இந்தியா டிரேடர்ஸ்-ன் உத்திரபரதேச கிளையினர் தலைவர், திரு மகேந்திர கமார் கோயல், நிருபர்களிடம் பேசுகையில் இந்த 45 நாட்களில் 25,000 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடக்க வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். இதில் பூஜை பொருட்கள் சம்பந்தப்பட்ட வியாபாரம் மட்டும் 5,000 கோடிகளுக்கு மேல் ஈட்டப் போவதாகவும் பால் சார்ந்த பொருட்களின் மூலம் 4000 கோடிக்கு மேலும் பூக்கள் மட்டுமே 800 கோடி ரூபாய்க்கு மேலும் மற்றும் தங்கும் விடுதிகள் 6,000 லிருந்து 7,000 கோடி வரை ஈட்ட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றார்.
கான்ஃபிடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் (CII)-ன் உத்திர பிரதேச கிளையின் தலைவர், திரு அலோக் சுக்லா, இதைப் பற்றி கூறுகையில் இந்த 45-நாள் நிகழ்ச்சி பங்குபெறும் பல நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டுக்கு உண்டான வருமானத்தை ஈட்டி தந்து விடும் என்ற கருத்து கூறியுள்ளார்.
மேலும் அந்த மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சித் துறையின் தலைவரான அபராஜிதா சிங் இந்த நிகழ்ச்சிக்கு வரும் யாத்திரிகர்களை பணிவோடு வழி காட்டுவதற்கும் மற்றும் வியாபாரிகளுக்கு பல டிஜிட்டல் தொழில் நுட்பங்களையும், அந்த மாநிலத்தின் சிறந்த கல்வி நிறுவனமான அலகாபாத் யூனிவர்சிட்டி உடன் இணந்து சொல்லிக் கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: உ.பியில் மகா கும்பமேளா இன்று தொடங்கியது: லட்சக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடினர்...