ஊருக்குள் உலா வந்த சிறுத்தைகள்.. பீதியில் உறைந்து நிற்கும் கிராம மக்கள்..!
நீலகிரியில் இரண்டு சிறுத்தைகள் உலா வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வனப்பகுதியை மட்டுமே கொண்ட நீலகிரி மாவட்டம் ஆனது அரிய வகை பறவைகள், யானை, மான், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. இதன் நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதை அடுத்து வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் நீரின்றி வறண்டு காணப்பட்டு வருகிறது.
இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் வசப்படத்திற்குள் நுழைந்து வருகின்றன. மேலும் இதனால் மனித வனவிலங்கு மோதல் அதிகரிக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தேக்க தொட்டிகளில் வன விலங்குகள் குடிநீர் பருகுவதற்காக அவ்வப்போது தண்ணீர் நிரப்பி வருகின்றனர். ஆனாலும் மாவட்டத்தில் வனப் பகுதியில் புல்வெளிகள், தாவரங்கள் காய்ந்து கருகி உள்ளதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: மியான்மர் நாட்டை திணற வைக்கும் பூகம்பங்கள்.. மீண்டும் இன்று குலுங்கிய கட்டடங்கள்..!
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உதகை குடியிருப்பு பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தைகள் உலா வருவதனை வழக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக இரண்டு சிறுத்தைகள் ஊருக்குள் உலா வந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதற்கிடையே இந்த வைரல் வீடியோ பதிவு அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் உலா வரும் சிறுத்தைகளை வனத் துறையினர் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பேராசை.. பயத்தால் மதம் மாறாதீர்கள்...சுயநலத்தில் சிக்காதீர்கள்- மோகன் பகவத் எச்சரிக்கை..!