அடடே இது புதுசா இருக்கே.. அன்னதானம் சாப்பிடுவது போல் நுழைந்து ஆர்பாட்டம்.. இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது..
திருப்பரங்குன்றத்தில் அன்னதானத்திற்கு சாப்பிடுவது போல் நுழைந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ருசிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது ஆர்பாட்டத்திற்கு தானே தடை, அன்னதானத்திற்கு தடையில்லையே என்ற வகையில் சாப்பிடுவது போல் நுழைந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் சுப்ரமணிய சுவாமி கோயிலும், மலைமீது சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலும் அமைந்துள்ளது. சிலநாட்களுக்கு முன்னர் ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகள் மலைமீது பலியிடப்படுவதாக இந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி இருந்தனர். இது தங்களின் வழிபாட்டு உரிமை என்று இஸ்லாமியர்கள் விளக்கம் அளித்து இருந்தனர்.
ஆனாலும் இந்த விவகாரம் நீறூபூத்த நெருப்பாக மதுரையில் கனன்று வந்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்து அமைப்பினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் பங்கேற்க போவதாக தமிழக பாஜகவும் கூறியது. இதையடுத்து பதற்றத்தை தடுக்க மதுரையில் நேற்று காலை தொடங்கி இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இன்னொரு அயோத்தி ஆகிறதா திருப்பரங்குன்றம்..? 144 தடை உத்தரவு போட வேண்டிய அவசியம் ஏன்..?
இந்த உத்தரவை அடுத்து இந்து முன்னணி அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்தனர். மதுரை மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற பிறமாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகளும் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். ஜனநாயகரீதியில் போராடுபவர்களை கைது செய்வதா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் மலைஏற பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் வழக்கமான அன்னதானக் கூடம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மதிய உணவு சாப்பிடுவது போல அன்னதானக் கூடத்திற்குள் நுழைந்து வரிசையில் நின்றிருந்தனர். உணவுக்கூடம் திறக்கப்பட்டதும், திடீரென அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஓடினர். திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தன்மையை காக்க வேண்டும், பச்சை நிற பெயிண்ட் அடிக்கக்கூடாது என முழக்கங்களை எழுப்பிக் கொண்டே ஓடினர்.
இதனைப் பார்த்து பதறிப்போன போலீசார், இது என்னடா சோதனையா போச்சு என்று பாய்ந்து போய் அவர்களை பிடித்து அவர்களை வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அன்னதானம் சாப்பிடுவது போல் நுழைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிரின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி அன்னதானக் கூடத்திற்கும் பூட்டு போட்டு விடுவார்கள் போல...
இதையும் படிங்க: இன்னொரு அயோத்தி ஆகிறதா திருப்பரங்குன்றம்..? 144 தடை உத்தரவு போட வேண்டிய அவசியம் ஏன்..?