புலி அடித்து இளைஞர் பலி.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் கிராம மக்கள்..
உதகையில் புலி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடும் வெயில் தாக்குதல் நிலவி வருவதால், வனப் பகுதிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு, மனிதர்கள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
உதகை அருகே பார்சன்ஸ் வேலி கொள்ளிக்கோடு மந்த் வனப்பகுதியில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த கேந்தோர் குட்டன் என்பவர் விறகு சேகரிப்பதற்க்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இரவு முழுவதும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வனப்பகுதியில் அவரை தேடியுள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதா..? அடியோடு மறுக்கும் இந்தியா…!
இதில், கிராமத்தின் எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில், கேந்தர் குட்டன் வனவிலங்கு தாக்கி பாதி உடலுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இச்சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், புலி தக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் தனியாக செல்ல வேண்டாம் என்றும், அப்பகுதியில் புலி தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு கடலில் கிடைத்த பொக்கிஷம்..!