மறைந்திருந்து தாய், சேயை புகைப்படம் எடுத்த மர்ம நபர்.. தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு..!
சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணையும், அவரது 3 வயதுக் குழந்தையையும் செல்போனில் படம்பிடித்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்த்தை சேர்ந்த தம்பதியினருக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவர் ஒரு அறையிலும், மனைவியும் குழந்தையும் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். கோடை வெயிலை முன்னிட்டு வீட்டை தாழ்பாளிடாமல் மூவரும் தூங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, வீட்டின் அருகில் ஏதோ சத்தம் கேட்டு பெண் முழித்துப் பார்த்தபோது, சிவப்பு சட்டை அணிந்த ஆண் ஒருவர் அவரையும் குழந்தையையும் செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். மேலும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், மர்ம நபர் அவரது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதை கண்டுள்ளனர்.
இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு..! காங்கிரஸ் எம்.பி ஓவைசி தாக்கல்..!
இதை எடுத்து பகுதி சேர்ந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளனர். அப்போது கையும் களவுமாக இளைஞர்கள் மர்ம நபரை லாபகமாக மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் அந்த நபரை இளைஞர்கள் கோட்டூர்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர் தரமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய பாஜக..! என்டிஏ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமை வலுக்கிறது..!