×
 

4 பெண்களை ஏமாற்றிய நிஜ "நான் அவன் இல்லை"- 2 வது மனைவியின் facebook பதிவால் சிக்கிய காமெடி

நான் அவன் இல்லை என்ற சினிமா படத்தின் பாணியில் நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய  கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் வெள்ளரிக் குண்டு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், கோன்னி மாவட்டம் புலி முக்கு பகுதியில் வசித்து வந்தவருமான அவருடைய பெயர் தீபு பிலிப் (வயது 36.).  "நான் அவன் இல்லை" என்ற சினிமா படத்தில் தன்னை ஒரு அனாதை என்று கூறிக்கொண்டு, பெண்களின் இரக்கத்தை அதன் மூலம் சம்பாதித்து பலரை ஏமாற்றி திருமணம் செய்த காட்சிகள் இடம் பெற்று இருக்கும். 

தீபு பிலிப்பும் இதே பாணியில் பெண்களிடம் தன்னை யாரும் இல்லாத ஒரு அனாதை என்று அறிமுகம் செய்து கொண்டு, தனது தனிமையை போக்க உதவும் படி உருக்கமாக பேசி, இப்படி நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறார். ஒவ்வொரு பெண்களிடமும் தனது ஆசையை தீர்த்துக் கொண்டு சிறிது காலம் அவர்களுடன் வாழ்ந்த பின்பு அடுத்த பெண்களை நோக்கி தாவி இருக்கிறார். 

முதலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளரிக்குண்டை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் திருமண செய்தபோதுதான் தமது ஏமாற்று வித்தையை அவர் தொடங்கினார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று ஒரு நாள் மனைவியின் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அவரையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு வெளியூர் சென்று விட்டார் பிலிப். 

இதையும் படிங்க: இந்தியா வந்தது கின்னஸ் குழு..! கும்பமேளாவில் 3 நாட்களில் மூன்று 3 சாதனைகள்..!

அதைத்தொடர்ந்து காசர்கோட்டை சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் நெருக்கமாக பழகி, அவரை திருமணம் செய்து சில காலம் அந்த பெண்ணுடன் வாழ்ந்தார். பின்னர் அந்தப் பெண்ணையும் கைவிட்டு விட்டு, எர்ணாகுளத்துக்கு தனது இடத்தை மாற்றினார். அங்கும் வழக்கம்போல் அதே பாணியில் மற்றொரு பெண்ணிடம் நெருக்கம். அவரையும் திருமணம் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்தபின் ஆலப்புழாவை சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் முகநூல் மூலம் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து  எர்ணாகுளத்து பெண்ணையும் விவாகரத்து செய்துவிட்டு, முகநூல் காதலியான ஆலப்புழாவை சேர்ந்த பெண்ணை அர்த்துங்கல் எந்த இடத்தில் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு தான் "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்பது போல், சுவாரஸ்யமான ஒரு ட்விஸ்ட். தீபு பிலிப் இரண்டாவதாக திருமணம் செய்து பின்னர் கைவிட்ட பெண்ணும், நான்காவது புது மனைவிக்கும் ஏற்கனவே முகநூலில் நல்ல நட்பு இருந்தது. 

தனது கணவரை அறிமுகம் செய்து முகநூலில் பதிவிட்ட போது இரண்டாவது மனைவி மூலம் தீபு பிலிப்பின் 'குட்டு' அம்பலமானது. இதனால் திகைத்துப் போன அந்த புது மனைவி தனது முகநூல் நட்பான இரண்டாவது மனைவியின் எச்சரிக்கையை தொடர்ந்து, கோன்னி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தீபு பிலிப்பை 'கொத்தாக தூக்கி' கைது செய்து, சிறையில் அடைத்தனர். தனது முகநூல் தோழி தன்னை எச்சரிப்பதற்கு முன்பே ஏற்கனவே நடந்த ஒரு கார் விபத்தில் தீபுவிற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வந்தது.

இந்த பணம் வந்த பிறகு அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டதையும் அவர் போலீசாரிடம் கொடுத்த புகாரில் தெரிவித்திருக்கிறார். அப்போதே ஐந்தாவது திருமணத்திற்கு அவர் அடிபோட்டு இருக்கலாம். ஆனால் அடுத்து எந்தப் பெண் அவருடைய திருமண வாழ்க்கையில் சிக்க இருந்தாரோ, அவருடைய நல்ல காலம்.. அல்லது இவருடைய கெட்ட காலம்..  'மாட்டிக்கிட்டாரு மைனரு'!
 

இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share