×
 

தமிழுக்கு தான் முன்னுரிமை..! ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி..!

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருதமலை முருகன் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கின் போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் யாகசாலைகள் அமைத்து வேள்விகள் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.

முருகப்பெருமான் அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்று கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை.இந்த ஆலயம் முருகனின் ஏழாம் படைவீடு என்றும் புகழப்படுகிறது.மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். அந்த சிலைதான் தற்போது கருவறையில் உள்ளது.

தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் மருதமலை முருகன் காட்சி தருவார்.விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் முருகனுக்கு அணிவிக்கப்படும். மேலும், அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இத்தல இறைவனை, தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும்.

இதையும் படிங்க: காமெடியன் குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

இத்தகைய சிறப்பு பெற்றுள்ள கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் நான்காம் தேதி நடக்க உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓத வேண்டும் என வலியுறுத்தி என்னை உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் பாபு விஜயராகவன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்த வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜராகி, மருத மலை கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகள் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் ஆகியோர் தமிழ் மந்திரங்கள் ஓதுவார்கள் என்றும் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் யாக பூஜையின் போது 36 யாக குண்டத்தில் தமிழிலும், 36 யாக குண்டத்தில் சமஸ்கிருதத்திலும் வேள்வி நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. இந்துசமய அறநிலையத்துறை திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share