மெட்ரோ ரயில் வழக்கு.. நிலம் கையகப்படுத்தும் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை..!
மெட்ரோ நிலையத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த ரத்து செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் ராஜ கோபுரத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஆலயம் காப்போம் கூட்டமைப்பு’ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பாதை ஆகியவை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance) நிறுவன வளாகத்தில் மாற்றப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. இதனை பதிவு செய்த நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு, மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்.. ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
இந்த நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னதாகவே முன் அனுமதி பெற்று ரூ.200 கோடி செலவில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த உத்தரவாதத்தை செயல்படுத்தும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறி அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டடத்தின் முன்புள்ள காலி இடத்தை கையகப்படுத்த, மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஆட்சேபம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: நெருங்கும் சித்திரை முழு நிலவு மாநாடு; ராமதாஸ் - அன்புமணி மோதல் சரியாகிவிட்டதா? ஜிகே மணி சொல்வது என்ன?